28.5 C
Chennai
Sunday, May 5, 2024

80,000 கோடி செலவில் புதிய நீர்ப் பாசனத் திட்டம் – தெலுங்கானாவின் பொறியியல் சாதனை இது…

Date:

காரசாரமாகச் சாப்பிடும் தெலுங்கர்கள் அதிரடிக்கு சிறிதும் சளைத்தவர்கள் அல்ல. எதிரிகளை துவம்சம் செய்யும் ஆயாச தெலுங்கு ஹீரோக்களை நாம் பார்த்து சிரிக்காத நாட்களில்லை. நாம் சிரித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில்தான் அவர்கள் சிறப்பான சம்பவம் ஒன்றை செய்துகொண்டிருக்கிறார்கள். பாகுபலியை மிஞ்சும் ஒரு பிரம்மாண்டத்தை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். 2.0 வை மிஞ்சும் ஒரு பெரிய “ஓ’ வை செதுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.தண்ணீருக்காக சுமார் 80,000 கோடி ருபாயை தண்ணியாக செலவு செய்து கொண்டிருக்கிறார்கள்…

Kaleshwaram
Credit: Telangana Today

காலேஸ்வரம் திட்டம்

2007 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியால் அப்போதைக்கு பிரிக்கப்படாத ஆந்திராவில் அறிவிக்கப்பட்ட திட்டம் தான் “ பிரனஹிதா செவலா நீர்ப்பாசன திட்டம் (Pranahita Chevella Lift Irrigation Scheme)”. அதன்படி தடுப்பணைகள் கட்டி வெறும் 16.5 TMC தண்ணீரே சேமிக்க முடியும். 2014 ல் தெலுங்கானா பிறந்த பிறகு ஆட்சிக்கு வந்த திரு.கே சந்திரசேகர ராவ் ஒட்டுமொத்த திட்டத்தையும் தூக்கியெறிந்தார்.  அவரால்  மிக ஆழ்ந்த கவனத்துடன் உருவாக்கப்பட்டதே இப்புதிய “காலேஸ்வர நீர்ப்பாசன திட்டம்”.

மொத்தம் 32000 ஹெக்டேர் நிலப்பரப்பில் (3168 ஹெக்டேர் வனப்பரப்பு ) இந்த மாபெரும் கட்டுமானம் உயிர்பெற்று வருகிறது.

திட்டம் இதுதான்

வறண்ட மாநிலமான தெலுங்கானாவின் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே சார்ந்திருப்பவர்கள். போதிய நீர்மேலாண்மை இல்லாததால் விளைச்சலுக்கு விண்ணைத்தான் பார்க்கவேண்டும். மேலும் மாவோயிஸ்டுகள் தாக்கம் உள்ள மாநிலமாக இருப்பதால் தொழிற்சாலை வாசனையும் இங்கு குறைவே.

அறிந்து தெளிக!!
“2016 – 2018 வரை தெலுங்கானாவில் சுமார் 3000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்” என NCRB அறிக்கை கூறுகிறது. முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் இலவச மின்சாரம், மானியம், கடன் தள்ளுபடி ஆகிய நிவாரணம் வழங்கியதன் மூலமாக  மக்கள் ஓரளவு நிம்மதி கொண்டனர்.

கோதாவரி ஆறும் (மூலம் மகாராஷ்டிரா) பிரனஹிதா ஆறும் (மூலம் மத்திய பிரதேசம் – சாத்புரா காடுகள்)  சங்கமிக்கும் மெட்டிகடா அணைதான் இந்த திட்டத்தின் அஸ்திவாரம். அதனைத் தொடர்ந்து கோதாவரி ஆற்றிலே வரிசையாக மூன்று தடுப்பணைகள் (எல்லம்பள்ளி, சுண்டிலா, அண்ணபுரம்), மற்றொரு தடுப்பணையான ஸ்ரீ ராம் சாகர் அணையிலிருந்து இரண்டு மிகப்பெரிய கால்வாய்கள் மூலம் தண்ணீர் கடத்தப்பட்டு MID மன்னார் மற்றும் Lower மன்னார்  ஆகிய நீர்தேக்கங்களை வந்தடைகின்றன . எல்லம்பள்ளி தடுப்பணை நீரானது ஸ்ரீராம் சாகர் அணையிலிருந்து வரும் ஒரு கால்வாயில் சேர்க்கப்படுகிறது. இங்கிருந்து இன்னும் சில அணைகளுக்குத் தண்ணீரை அலைக்கழிப்பு செய்கின்றனர். முழு திட்டமும் 7 link மற்றும் 28 package  களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு அணையிலிருந்து மற்றொரு அணைக்கு தண்ணீரை கொண்டு செல்வது link ஆகும். அதன் கட்டுமான உடற்கூறு Package ஆகும். இந்த திட்டத்தின் மூலம் 180 TMC தண்ணீரை கையாள்வதோடு அதில் 145 TMC தண்ணீரை சேமிக்கவும் முடியும்.

Kaleshwaram-Project
Credit: Telangana Today

திட்டம் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அதற்கான மெனக்கெடல் தான் சிலிர்க்க வைக்கிறது. உதாரணமாக MID மன்னார் தேக்கத்திலிருந்து மல்லன் சாகர் அணைக்கு தண்ணீரை இழுப்பதற்குள் அதிகாரிகள் பிராணன் பாதி போய்விட்டது. அங்குள்ள மக்கள் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கட்டுமானத்திற்கான நிலத்தைப்பெற Land Acquisition Act என புதிய சட்டத்தையே கொண்டுவர நேரிட்டது. பலனாக 18 லட்சம் ஏக்கர் நிலம் நீர்ப்பாசனம் பெறவும் மேலும் 18 லட்சம் ஏக்கர் நிலம் நிலத்தடி நீரால் நிலைப்படுத்தப்படும். மொத்தம் 32000 ஹெக்டேர் நிலப்பரப்பில் (3168 ஹெக்டேர் வனப்பரப்பு ) இந்த மாபெரும் கட்டுமானம் உயிர்பெற்று வருகிறது.

பொறியியல் சாதனை

அதிக அளவு தண்ணீரை இவ்வாறு பல கிலோமீட்டர் தூரம் கையாள்வதற்கு அனைத்து நில அமைப்புகளும் எளிதானதல்ல. தாழ்ந்த நிலப்பகுதி தவிர்த்து மேடான நிலப்பகுதிகளுக்கு தண்ணீரை கொண்டு செல்ல 8 Pumping Station அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றுதான் ராமடுகு Pumping Station. தரைக்கடியில் 330 மீ ஆழத்தில் 7 மாபெரும் பம்புகளை கொண்டு தண்ணீரை மேடான  இடத்திற்கும் வெகு தொலைவிற்கும் தண்ணீரை பீச்சியடிக்க வகை செய்துள்ளனர். ஒவ்வொரு மோட்டார் பம்பும் 139MW திறன் கொண்டது. ஏழு பம்புகளும் ஒரே நேரத்தில் இயங்கினால் 21000 கனஅடி நீரை பீச்சியடிக்கும். இந்த அளவு திறன் கொண்ட மோட்டார் நாட்டிலேயே இங்குதான் முதல்முறை நிறுவப்பட்டுள்ளது.

இங்குதான் புத்திகூர்மை வாய்ந்த வாசகர்களுக்கு சந்தேகம் வந்திருக்க வேண்டும். தரைக்கடியில் இவ்வளவு ஆழமென்றால் நிலத்திடி நீரை எப்படி சமாளித்திருப்பார்கள் என்று. அங்கேதானே அறிவியல் இருக்கிறது. புதிய திட்டம் வகுக்கும் போதே அதிநவீன LiDAR ஐ ட்ரோன்களில் பொருத்தி  வானிலிருந்து கிட்டதட்ட முழு மாநிலத்தையுமே ஆராய்ந்து விட்டார்கள். எங்கே தண்ணீர் உள்ளது? எவ்வளவு ஆழ்த்தில் உள்ளது? மண்ணின் தரம் என்ன? எத்திசையில் தண்ணீரை கொண்டு செல்லலாம்? என்று அனைத்து கேள்விகளுக்கும் விடையெழுதிவிட்டனர் பொறியாளர்கள்.

இருப்பதிலேயே மிகக் கடினமான பகுதி எல்லம்பள்ளி முதல் Mid மன்னார் இடையில் உள்ள லக்ஷ்மிபுரம் தான். இதுபோன்ற நீண்ட தொலைவிற்கு தண்ணீரை கொண்டு செல்ல 140 அடி ஆழத்தில் ஒரு Pump House ம் அதற்குத் தேவையான Electrical Substation கட்டப்பட்டு வருகின்றன. திப்பப்பூரில் ஒரு ஊரணி அளவுள்ள Surge Pool எனும் செயற்கை குளம் Pumbing Station க்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இது மோட்டாருக்கு செல்லும் தண்ணீரை தேக்கி மிதமான வேகத்தில் பம்புக்கு அனுப்புகிறது. ஆசியாவிலேயே இதுதான் மிகப்பெரிய Surge Pool.

kaleshearam tunnel
Credit: Deccan Chronicle

இருப்பதிலேயே மிகப்பெரிய Pumping Station தரைக்கடியில் 57,049 சதுர அடி கொள்ளளவு கொண்டது. சிறியது 30,746 சதர அடி கொண்டது. இந்த 330 மீட்டர் ஆழத்திலேதான் அந்த மோட்டாருக்கு தேவையான பவர் ஹப், பேட்டரி அறை , டிரான்ஸ்பார்மர்கள், கன்ட்ரோல் பேனல், கம்பிரசர் அறை, கட்டுப்பாட்டு அறை என ஒரு அணுமின் நிலையத்திற்குத் தேவையான சூழலை உருவாக்கிவருகின்றனர்.

இத்தகைய சூழலில் இவ்வளவு சாதனங்களை நிறுவுவது சாமான்யமல்ல. அதை தெலுங்கானாவைச் சேர்ந்த MEIL (Megha Engineering Infrastructure Limited) நிறுவனமும் (பொருத்தமான பெயர்தான்)  நமது BHEL நிறுவனமும் இணைந்து சாதித்துவருகின்றன. ஒரு சில மோட்டார்கள் ஃபின்லாந்து மற்றும் ஜெர்மனி நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டிருக்கின்றன. சில பகுதிகளை கட்டுமான ராஜாவான L&T செய்துவருகிறது.

செலவு மற்றும் வரவு

“இத்திட்டத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து மோட்டாரையும் இயக்க 4100 kw மின்சாரம் தேவைப்படலாம். வருடாந்திர மின்சார கட்டணம் 11,000 கோடியை நெருங்கிப்பிடிக்கும்.” இவ்வளவு செலவோடு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தங்குதடையின்றி விநியோகிக்கப்பட இருக்கிறது. அம்மாநிலத்தில் 2020 க்குள் 27,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அழிக்கப்பட்ட வனத்திற்கு மாற்றாக ஏழு மாவட்டங்களில் வறண்ட நிலப்பகுதியாக இருக்கும் 2153.121 ஹெக்டேர் வனமாக மாற்ற முடிவுசெய்தது அரசு. இதுவரை 1,00,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

twin-tunnels
Credit: Hyderabad Stories

திட்டத்தில் ஒரு பகுதியான மெட்டிகடா தடுப்பில் 7000 கன அடி கான்கிரீட் கலவையை ஒரே நாளில் கையாண்டு ஆசிய அளவில் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. 2019 இறுதிக்குள் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆந்திராவிற்கு அடுத்து ஒற்றைத் திட்டத்தில் எதிர்காலத்தை எதிர்நோக்கியுள்ள மாநிலம் தெலுங்கானாதான். அவர்களின் எதிர்காலமே இத்திட்டத்தில்தான் உள்ளது. கோதாவரி ஆற்றிலேயே ஆந்திர அரசால் கட்டப்பட்டு வரும்   போலவரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு இந்த காலேஸ்வரம் திட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

Popular

More like this
Related

Most Bet Bahis Güvenilir Giriş Siteleri Turk

Most Bet Bahis Güvenilir Giriş Siteleri Turk

test

test test

test

test test

What Is So Fascinating About Marijuana News?

What Is So Fascinating About Marijuana News? ...
error: Content is DMCA copyright protected!