அரசியல் & சமூகம்

பாஜகவின் நன்கொடைப் பத்திரம் திட்டத்தினால் யாருக்குப்பயன்?

2017 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரம் (Electrolyte bond scheme) சட்டத்தை நீர்த்துப் போகச்செய்ய,  உச்சநீதிமன்றத்தில் பல தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் வாயிலாக பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன் மீதான அடுத்தகட்ட விசாரணை வருகின்ற  ஏப்ரல் 10 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விவாதத்திற்கு வருகிறது. அது என்ன தேர்தல் பத்திரம்?  தேர்தல் நேரத்தில் அதனை எதிர்க்க வேண்டிய கட்டாயம் எதிர்கட்சிகளுக்கு ஏன்?

Electrol bond scheme (2017)

இந்தியத் தேர்தலில் ஒரு புரட்சியை(!) ஏற்படுத்தும் நோக்கத்தோடு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டதுதான் இந்தத் “தேர்தல் பத்திரச் சட்டம்”. அதன்படி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் தனிநபர்/ தனியார் நிறுவனங்களின் அடையாளம் பாதுகாக்கப்படும். அத்தோடு ஒட்டுமொத்த நன்கொடையுமே வங்கிகளின் கண்காணிப்பிலே நடைபெறும். கட்சிகள் கருப்புப் பணத்தை நன்கொடையாக பெறுவதும் ஒரு கட்சிக்கு நன்கொடை அளித்த நபரை/ நிறுவனத்தை மற்ற கட்சிகள் மிரட்டி பணம் பறிப்பதும் அவரது அடையாளத்தை மறைப்பதன் மூலம் தடுக்கப்படும். இது இந்தியக் கட்சிகள் மறைமுகமாக (கருப்புப் பணமாக) நன்கொடை பெறுவதைத் தடுக்கும். இதுதான் 2017 ஆம் ஆண்டின் பட்ஜெட் தாக்கலின்போது இதனை அறிமுகப்படுத்திய  மத்திய அரசின் கூற்று.  என்ன கருப்புப் பணம் ஒழிகிறதா? இதையா மற்ற கட்சிகள் விரும்புவதில்லை?

கருப்புப் பண ஒழிக்கும் தேர்தல் பத்திரம் சட்டம்…

இந்திய மக்கள் பிரதிநிதிச்சட்டம் (1951)  பிரிவு (29A) வின் கீழ் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகள், தான் போட்டியிடும் தேர்தலில் ஒரு சதவிகித  வாக்குகளைப் பெறும்போது அவைகளுக்கென வங்கிக் கணக்கு துவங்கப்பட்டு அவை தேர்தல் ஆணையத்தால் கண்காணிக்கப்படும். இந்த வங்கிக் கணக்குகளில் தான் கட்சிகளின் முழு வரவு செலவுகள் அடங்கும். முன்னரெல்லாம் 2000 ரூபாய்க்கு மேல் வரும் நிதியை கட்சிகள் கண்டிப்பாகக் கணக்கில் காட்டியாக வேண்டும். யார் கொடுத்தது?  எப்போது கொடுத்தது என்றெல்லாம் தேர்தல் ஆணையத்தின் கேள்விகள் துளைக்கும்? அதற்காக அதனை பல அரசியல் கட்சிகள் மறைப்பதும் உண்டு. ஆனால் தேர்தல் பத்திரச் சட்டம் நடைமுறைக்கு வந்ததற்குப் பின்னர் அனைத்துக் கட்சி பெறும் நிதியும் கணக்கில் வந்துவிடும். அவை  மறைக்க முடியாத / விரும்பாத வண்ணம்  இச்சட்டம் அமைந்திருப்பதே இதன் சிறப்பு.

எப்படி நடக்கிறது இப்புதிய நன்கொடை?

அரசியல் கட்சிகள் நன்கொடையளிக்கும் ஒருவர், வங்கிக்குச் சென்று, தன்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக பணத்தை வங்கிக்கு செலுத்தி அப்பணத்திற்கு இணையான மதிப்பில்  பத்திரம் ஒன்றை வாங்கிக்கொள்ளலாம். அதனை தான் விரும்பும் கட்சிக்கு அவர் தாராளமாக அளிக்கலாம். பத்திரத்தைப் பெற்ற கட்சியானது 15 நாட்களுக்குள் அதனை  வங்கியில் செலுத்தி,  தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனது வங்கிக் கணக்கில் பத்திரத்தின் மதிப்பை பணமாக வரவு வைக்கவேண்டும். காலம் தாழ்த்தினால் பத்திரம் செல்லாததாகிவிடும்.

தேர்தல் பத்திரம் எங்கே கிடைக்கும்?

அனைத்து கட்சிகளும் விரும்பும் இப்பத்திரமானது, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் மட்டுமே கிடைக்கிறது. நாணயமாக வருமானவரி செலுத்தும் எந்தவொரு நபரும் பத்திரத்தை பெறலாம். 1000, 10000, ஒருலட்சம், பத்து லட்சம் மற்றும் என ஒரு கோடி வரையிலான பெருக்குத்தொகையில் பத்திரம் கிடைக்கிறது. பத்திரத்தை ரொக்கமாக  செலுத்தி  வாங்கமுடியாது. எனவே நபர் தனது வங்கிக் கணக்கை அளிக்கவேண்டும். அதிலிருந்து அவர் விரும்பிய பணம் பிடிக்கப்பட்டு  பத்திரமாக பரிமாணம் அடையும். மேலும் வருடத்தில் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் ஆகிய நான்கு காலண்டு பகுதிகளில்  குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே பத்திரம் விற்பனை செய்யப்படும். இந்த வருடம் நடைபெறும்  நாடாளுமன்றத் தேர்தலைக் கருதி 30 நாட்கள் நீட்டிப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது.

யாருக்கு லாபம் தரும் இந்தச் சட்டம்?

முதலில் அனைத்து கட்சிகளுக்கும் வேண்டா வெறுப்பாக நிதியளிக்கும் கவலை எந்த தொழிலதிபருக்கும் இல்லை. மேலோட்டமாக பார்த்தால் கோடிக்கணக்கில் நன்கொடை பெறும் அனைத்து கட்சிகளுக்குமே இது நன்மை பயக்கும் சட்டம் தான்.  நன்கொடையளிக்கும் நபர் மற்றும்  அதனைப் பெறும் கட்சி  ஆகிய இரண்டு பேருக்குமே பத்திரத்தின் மூலம்  நன்கொடை அளிப்பதிலிருந்து  வரிவிலக்கு அளிக்கப்படும்.

Credit: The Economic Times

மாற்றம். முன்னேற்றம்

இந்தத் தேர்தல் பத்திரச்சட்டம் கொண்டுவருவதற்கு முன்னரே மத்திய அரசு “income tax act, Foreign contribution regulation  act மற்றும் people representation act (1951)” களில் 2016 ஆண்டிலேயே சில மாற்றங்களை கொண்டுவந்தது.

அவற்றில் குறிப்பிடத்தக்கவை,

  • 20,000 ரூபாய்க்கு கீழ் நிதி அளிக்கும் நபரின் பெயர், தொழில், PAN போன்ற தகவல்களை நன்கொடை பெறும் கட்சிகள் வெளியிடத் தேவையில்லை.
  • வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களில் பெரும்பகுதி பங்குகளை தன்வசம் வைத்திருந்தால் அவையும் கட்சிகளுக்கு நன்கொடையளிக்க தகுதிவாய்ந்தவை. வரிவிலக்கும் உண்டு.

“நாங்கள் காலம் காலமாக பெறும் ரகசிய நன்கொடைக்குக் கூடத்தான்  நாங்களே வரிவிலக்கு  அளித்துக் கொள்கிறோம். இது என்ன மூட்டைப்பூச்சியை கொல்லும் நவீன மெஷீனா? என்று எந்தக் கட்சியும் கேட்டுவிடக்கூடாது என்பதற்க்காகதான் இந்த வரிவிலக்குச் சலுகை.

ஏன் எதிர்க்கப்படுகிறது இந்தச் சட்டம்?

கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் அதனை கோயிலில் போடுகிறார்கள் அல்லது கட்சிகளுக்கு கொடுத்து மறைமுகமாக அரசியல் ஆதாயம் பெறுகிறார்கள். எப்படியோ அதனை கணக்கில் கொண்டுவந்தால் சரி என்ற அரசின்  நோக்கத்தைப் பாராட்டினாலும் பத்திரத்தின் மூலத்தை அவை வெளியிடத் தேவையில்லை என்பதுதான் சற்று சிந்திக்க வேண்டியதாக உள்ளது.  ஆனாலும் பத்திரத்தை வாங்கியவர் மற்றும் விற்பவரின் தகவல்  வங்கிகளிடம் இருக்கும்.  இது  தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை நீர்த்துப் போகச் செய்வதாக உள்ளது என்பது முக்கியக் குற்றச்சாட்டு. இச்சட்டத்தை தேர்தல் ஆணையம் உட்பட பல அரசியல் சாசன ஆய்வாளர்கள் பலர் எதிர்த்து வருகின்றனர். குறிப்பாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்மையளிக்கும் இச்சட்டத்தை வெளிப்படையாகவே எதிர்த்து வருவது மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPI – M) மட்டுமே.

  • வெளிநாட்டு நிறுவனங்கள் போல்  பல போலி  நிறுவனங்கள் துவங்கப்பட்டு நன்கொடை என்ற பெயரில் நிதியானது கட்சிகளுக்கு வழங்கப்படும் அபாயம் உள்ளது. இது கருப்புப் பணம் வெள்ளையாக மாற ரெட் கார்பெட் வரவேற்பு போன்றது.
  • இந்தியக் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், இந்திய அரசியலை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இச்சட்டம்  வழிவகுத்து விடும்.
  • இதுவரை வழங்கப்பட்ட நன்கொடைப் பத்திரங்களில் பெரும்பாலானவை 20,000 ரூபாய்க்கு கீழ் உள்ளவை. ஆக கருப்புப் பணம் ஒழிக்கப்படவில்லை அது வெள்ளையாக மாற்றப்படுகிறது என்பதே உண்மை.
  • இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டவை. இச்சட்டத்தின் மூலம் ஆணையத்தின் அதிகாரத்திலிருந்து விலகி கருப்புப் பணம் மறைமுகமாக புழங்குவது  தேர்தல் ஆணையத்தை வலிமையற்றதாக மாற்றிவிடும். இது இந்தியத் தேர்தலின் வெளிப்படைத்தன்மையையும் பாதிக்கும்.
Credit: The Economic Times

இதையும் படிங்க….

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின்படி, 2019 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டுமே 1716 கோடி ரூபாய் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி விற்றுள்ளது. இதில் மும்பையில் மட்டுமே 495.6 கோடி ரூபாய் பத்திரம் விற்பனை ஆகியுள்ளது. ஒட்டுமொத்த பத்திர மதிப்பில் இது 28.9 விழுக்காடு. இன்னொரு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கேள்விக்கு பதிலாக கிடைத்தது  என்னவெனில் 2017-18 நிதி ஆண்டில் முதல் காலாண்டு (ஜனவரி முதல் மார்ச் வரை) காலத்தில் (மார்ச்) மட்டுமே 222 கோடி ரூபாய் பத்திரம் விற்பனை செய்யப்பட்டது. அதில் 210 கோடி ரூபாய் பிஜேபியின் வங்கிக் கணக்கில் தாக்கல் செய்யட்டுள்ளது. இது அந்த நிதியாண்டில் 94.6 விழுக்காடு.  ஆகவே, விற்பனை ஆகும் பத்திரங்களில் பெரும்பங்கு பத்திரங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கே செல்வதாக மனுவில் கூறப்பட்டுள்ளது

 

Show comments