28.5 C
Chennai
Sunday, May 19, 2024

ஆங்கிலேயருக்கு எதிராக, தன் மண்ணைக் காப்பாற்ற துணிச்சலுடன் போராடிய வீர மங்கை ஜான்சி ராணி வரலாறு!

Date:

  • ஜான்சி ராணியின் (Jhansi Rani) இயற்பெயர் மணிகர்ணிகா
  • குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல் மற்றும் வாள் வீச்சு போன்ற தற்காப்புக் கலைகளை முறையாக பயின்றவர்
  • ஆங்கிலேயர்களை எதிர்த்து துளியும் பின் வாங்காமல் தன் கடைசி மூச்சு வரை போராடியவர் ஜான்சி ராணி.

ஜான்சி ராணி அவர்கள் வட மத்திய இந்தியாவில் இருந்த ஜான்சி என்ற இடத்தின் ராணியாக இருந்தவர். ஆணுக்கு நிகராக குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல் மற்றும் வாள் வீச்சு போன்ற கலைகளை கற்று தேர்ந்தவர். இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகக் போராடிய முன்னோடிகளில் ஒருவர்.

Rani Lakshmi Bai
Credit: Bhaskar

தோற்றம்

ராணி லட்சுமி பாய் ( ஜான்சி ராணி ) அவர்கள், 1828 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியில் (தற்போதைய வாரணாசி) ஒரு மராத்திய பிராமண குடும்பத்தில் மெளரியபந்தர்- பகீரதிபாய் தம்பதியினருக்கு மகளாக பிறந்தார். இவரது பெற்றோர் இவருக்கு மணிகர்ணிகா என பெயர் வைத்து மனு என்று செல்லமாக அழைத்தனர்.  இவரது தந்தை மௌரியபந்தர் பித்தூரிலுள்ள பேஷ்வா நீதிமன்றத்தில் வேலை செய்தார்.

ஜான்சி ராணி உருவாக்கிய இராணுவத்தில் ஆண்கள் மட்டும் அல்ல, பெண்களும் கூட தீவிரமாக ஈடுபட்டனர்!!

இளமைப் பருவம்

ராணி லட்சுமி பாய் அவர்களின் நான்காவது வயதிலேயே அவரது தாய் இறந்து விட்டார். அதனால் தந்தையின் கண்காணிப்பிலேயே வளர்ந்தார். சிறு வயது முதலே போர் புரியும் ஆசை கொண்டிருந்த  லட்சுமி பாய் அவர்கள் பள்ளிப்பாடம் படித்து கொண்டிருந்த சமயத்தில், குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல் மற்றும் வாள் வீச்சு போன்ற தற்காப்புக் கலைகளை முறையாக கற்று பயிற்சிகளை மேற்கொண்டு, அந்த காலத்திலேயே வீரத்தில் ஓர் ஆணுக்கு நிகராக திகழ்ந்தார்.

திருமணம்

1842 ஆம் ஆண்டு, மௌரியபந்தர் ஜான்சியின் மகாராஜாவாக இருந்த ராஜா கங்காதர் ராவ் நிவால்கர் என்பவருக்கு இவரை திருமணம் செய்து வைத்தார். திருமணத்திற்கு பின், அவருக்கு லட்சுமி பாய் என்ற பெயர் வழங்கப்பட்டது. மேலும் ஜான்சியின் ராணி ஆனார். அன்றிலிருந்து அவருடைய பெயரான மணிகர்ணிகா மறைந்து ஜான்சி ராணி லட்சுமிபாய் என்றானது. 1851 ஆம் ஆண்டு அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் நான்கு மாதங்கள் மட்டுமே அந்த குழந்தை உயிர் வாழ்ந்தது. இந்த இழப்பிலிருந்து மீள, அவர்களது உறவினரின் குழந்தையான ஆனந்த ராவ் என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தனர்.

இந்த தத்தெடுப்பில் ஆங்கிலேயர்கள் எந்த பிரச்சனையும் செய்யக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தார் லட்சுமி பாய். அதனால் அவர் உள்ளூர் ஆங்கிலேய பிரதிநிதிகளை சாட்சியாக வைத்துக் கொண்டு இந்த தத்தெடுப்பை நடத்தினார். தத்தெடுத்த குழந்தைக்கு தாமோதர் ராவ் என்று பெயரிட்டனர். அந்த காலகட்டத்தில், பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக லார்ட் டல்ஹௌசி (Lord Dalhousie) என்பவர் இருந்தார்.

Rani lakshmi Bai
Credit: wikimedia

ஆங்கிலேயர்களுடன் பகை

1853 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி லட்சுமி பாயின் கணவர் இறந்தார். அடுத்து தனது வளர்ப்பு மகன் தாமோதர் ராவை ஆட்சியில் அமர்த்த எண்ணினார் ஜான்சி ராணி. ஆனால், அப்போதைய ஆங்கியேல ஆளுநர் டல்ஹௌசி, ஆங்கிலேயே கிழக்கிந்திய நிறுவனத்தின்  மறுப்பு கோட்பாட்டின் படி (Doctrine of Lapse), தத்துப்பிள்ளையை அதிகாரபூர்வமாக மன்னராக ஏற்றுக் கொள்ள மறுத்தார். பிரிட்டிஷ் ஆட்சியும், ஆக்கிரமிப்பும் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவிக்கொண்டிருந்த காலம் அது. ஒரு மன்னருக்கு நேரடி வாரிசு இல்லையென்றால், அந்த அரசு தங்களுக்கே சொந்தம் என முடிவெடுத்து ஆங்கிலேயர்கள் ஜான்சி நாட்டைத் அவர்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிவெடுத்தனர்.

இதனால் தனக்கும் தன் மண்ணிற்கும் ஏற்படக்கூடிய விளைவுகளை அறிந்த ஜான்சி ராணி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ராணி லட்சுமி பாய் அவர்கள், ஒரு ஆங்கிலேய வழக்கறிஞரிடம் சென்று ஆலோசனைக் கோரினார். அதன்பிறகு, அவர் லண்டனில் அவரது வழக்கிற்கான ஒரு முறையீட்டை மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

ஆங்கிலேய அதிகாரிகள், லட்சுமிபாய் அவர்களின் அரசு நகைகளைப் பறிமுதல் செய்தனர். 1854 ஆம் ஆண்டு ஆண்டு மார்ச் மாதம் ராணி லட்சுமி பாய்க்கு 60000 ரூபாயை ஓய்வூதியமாகக் கொடுத்து ஜான்சிக் கோட்டையை விட்டு வெளியேறச் சொன்னார்கள்.  இது குறித்து ஒரு ஆணை நிறைவேற்றப்பட்டதால், ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், ஜான்சியிலுள்ள ராணி மஹாலில் தங்கினார்.

மீரட் கிளர்ச்சி

அப்போதே அவருக்கு ஆங்கிலேயர்கள் மீது போர் தொடுக்கும் எண்ணம் தோன்றியது. இதனால் தனது ஆதரவாளர்களை தேடி சென்று சேர்த்தார். அவர் உருவாக்கிய இராணுவத்தில் ஆண்கள் மட்டும் அல்ல, பெண்களும் கூட தீவிரமாக ஈடுபட்டனர்.  தனது படை பலத்தினை அதிகரித்து கொண்டு போருக்காக காத்துக்கொண்டிருந்தார்.

Jhansi Rani
ஜான்சி ராணி | Credit: News nation

1857 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி மீரட்டில்  இந்தியக் கிளர்ச்சி ஆரம்பமானது. போர் வீரர்களுக்குப் புதிதாக வழங்கப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளில் பசு மற்றும் பன்றியினதும் கொழுப்புப் பூசப்பட்டதாகப் பரவிய செய்தியை அடுத்து  இந்த கிளர்ச்சி ஏற்பட்டுப் பரவத் தொடங்கியது. இச்சந்தர்ப்பத்தில், ஆங்கிலேயர்கள் இந்தியக் கிளர்ச்சி சம்பந்தமாகவே கவனம் செலுத்தினர். ஜான்சி பற்றி அதிகக் கவனம் செலுத்தவில்லை. இதன் காரணமாக, ராணி லட்சுமி பாய் தனியாகவே ஜான்சியை ஆட்சி செய்தார். ஆனாலும் ராணி லட்சுமி பாய் ஆங்கிலேயர்களை எதிர்ப்பார் என்ற அச்சம் ஆங்கிலேயர்களிடம் இருக்கவே செய்தது.

இதனால், ஆங்கிலேயர்கள் 1857 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி ஜோக்கன் பாக்கில் ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் அதிகாரிகளைப் படுகொலை செய்ததில் ராணி லட்சுமி பாய்க்கும் பங்கு உள்ளதாகக் கூறி பொதுமக்களும் விவசாயிகளும் ராணி லட்சுமி பாய் மீது வைத்திருந்த மதிப்பைச் சீர்குலைக்க முயற்சி செய்தனர்.

போர்

இதனையே காரணமாக வைத்து, 1858 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி ஹக் ரோஸ் (Hugh Rose) என்பவரின் தலைமையில் ஆங்கிலேயர்களின் படை ஒன்று ஜான்சியைக் கைப்பற்றுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஜான்சியின் படைகளுக்கு உதவி செய்வதற்காகத் தாந்தியா தோப் (Tantia Tope) என்பவரின் தலைமையில் 20000 பேரைக் கொண்ட படை அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் அவர்களும் தோல்வி அடைந்தனர். ஆனாலும் ஜான்சி ராணி ஆங்கியேர்களிடம் அடிபணிய மறுத்துத் தனது படைகளுடன் இணைந்து கடுமையாகப் போர் புரிந்தார். தனது படை வீரர்களை வழி நடத்திச் சென்று பெரும் ஆற்றலுடனும் மிகுந்த துணிச்சலுடனும் போர் புரிந்தார். எனினும் மூன்று நாட்களுக்கு பின், ஆங்கிலேயர்கள் ஜான்சியை கைப்பற்றினர்.

ஜான்சி ராணியின் விருப்பப்படி அவரது உடல் உள்ளூர் மக்களால் குவாலியரின் அருகில் தகனம் செய்யப்பட்டது!!

ஆனால் ஜான்சி ராணியை அவர்களால் பிடிக்க முடியவில்லை. 1858 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி இரவு நேரத்திலே தனது மகனுடன்  ஜான்சி ராணி தப்பித்து கல்பிக்குச் சென்று தாந்தியா தோபின் படையுடனும் ராவ் சாஹிப் பேஷ்வாவின் படையுடனும் இன்னும் சில புரட்சிப் படைகளுடனும் இணைந்து கொண்டார். இவர்கள் குவாலியருக்குச் (Gwalior) சென்று குவாலியரின் மகாராஜா ஜயாஜிராவ் சிந்தியாவின் படையைத் தோற்கடித்து, குவாலியரின் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.

மறைவு

அடுத்து ஆங்கிலேயரின் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமிட்டது. 1858 ஆம்  ஆண்டு ஜுன் மாதம் 17 ஆம் தேதி கோட்டாகி சேராய் என்ற இடத்தில் வெள்ளையரை எதிர்த்து ஜான்சி ராணி போரிட்டார். அப்போது அந்த போரில் ஆண் வேடம் சித்தரித்து தொடர்ந்து சண்டையிட்டு போராடினார். ஆனால் பெரிய ஆயுதப்படையுடன் இருந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக இவரால் வெற்றி பெற முடியவில்லை. எதிரிகளின் படை மூலம் தாக்கப்பட்டு  1858 ஆம் ஆண்டு ஜுன் 18 ஆம் தேதி வீரமரணம் அடைந்தார். அடுத்து மூன்று நாட்களுக்கு பின் குவாலியரை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினார்கள். எனினும் ஜான்சி ராணியின் விருப்பப்படி அவரது உடலை ஆங்கிலேயர்கள் கைப்பற்றுவதற்குள், அவரது உடல் உள்ளூர் மக்களால் குவாலியரின் அருகில் தகனம் செய்யப்பட்டது.

Rani lakmibai bai Statue
ஜான்சி ராணி அவர்  குழந்தையுடன் | Credit: Mouthshut

சிறப்புகள்

அவர் மறைந்தாலும் இந்திய வரலாற்றில் வீரம் மிக்கப் பெண்ணாக இன்றும் மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளார் ஜான்சி ராணி! புரட்சித்தலைவர்களில் இவர் மிக ஆபத்தானவர் என்று ஆங்கிலேய படைத்தளபதி ஹக் ரோஸ் குறிப்பிட்டுள்ளதில் இருந்தே இவரது திறமையை அறிய முடியும். ஆங்கிலேயர்களை எதிர்க்க நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெண்கள் படை ஒன்றை உருவாக்கியபோது அதற்கு ஜான்சி ராணி படை என்று பெயரிட்டதில் இருந்தும் சுதந்திரப் போரில் இவரின் பங்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறியலாம். இவரது வீரத்தை போற்றும் வகையில் இந்தியாவில் பல இடங்களில் இவரது சிலை வைக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 19 – பெண்களை அடக்கி வைத்திருந்த அந்த காலத்திலேயே தன் மண்ணுக்காக துணிந்து போராடி வரலாற்றில் இடம் பெற்ற ஜான்சி ராணியின் பிறந்த நாளை இந்த வார ஆளுமையாக கொண்டாடி மகிழ்கிறது நியோதமிழ்!

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!