28.5 C
Chennai
Friday, May 17, 2024

எவரெஸ்ட் சிகரப் பயணம் 101: சாகச பயணம் பற்றி தமிழில் வெளிவரும் முதல் கட்டுரை இது தான்

Date:

101 பதிவு என்பது இதழியலின் மிக முக்கிய அங்கமாகும். எடுத்துக்கொண்ட தலைப்பு குறித்த அனைத்து தகவல்களையும் ஒரே கட்டுரையில் தருவதே 101 பதிவின் சிறப்பாகும். நமது எழுத்தாணியில் இதுவரை பல 101 பதிவுகள் வெளிவந்துள்ளன. அந்த வகையில் தற்போதய இந்தப்பதிவு  மயிர்கூச்செறியும் இமயமலை பயணத்தைப் பற்றி தமிழில் வெளிவந்த முதல் பதிவாகும்.

உலகின் உச்சிப்புள்ளியை அடைய அசாத்தியமான ஆற்றலும், உடைக்க முடியாத மனவலிமையுமே முதல் தேவைகள். சாகச நேசர்களுக்கான புனித பூமி 29,035 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சடுதியில் மாறும் சீதோஷ்ணம், பனிப்புயல், பனிச்சரிவு, ஆக்சிஜன் பற்றாக்குறை என எவரெஸ்ட் உங்களுக்கு அளிக்கும் சவால்கள் ஏராளம். இமயமலையின் குளிர், எலும்புகளுக்குள் பரவும் ஆக்ரோஷமுடையது. சூரியனின் சொற்ப வெளிச்சத்தில் இந்த உலகை அதன் உயரமான இடத்தில் காண வேண்டுமா? அதற்கான விடை தான் எவரெஸ்ட் பயணம். இயற்கையின் எல்லையற்ற சாத்தியங்களில் அதன் இருப்பிடத்தைக் கண்டடைவதற்கான இடமான எவரெஸ்ட் பயணம் பற்றி காணலாம்.

way to mount everest
Credit: thenextweb.com
அறிந்து தெளிக!!
ஐரோப்பிய ஆசிய கண்டத்தட்டுகளின் மோதலினால் மேல்நோக்கி எழுந்த நிலப்பரப்பே இமயமலை ஆகும். வருடத்திற்கு சராசரியாக ஒரு அங்குல வளர்ச்சியை இந்த மலை பெறுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எங்கே இருக்கிறது எவரெஸ்ட்?

இமாலய மலைத்தொடரின் திபெத்திய – நேபாள எல்லையில் அமைந்துள்ளது எவரெஸ்ட் சிகரம். திபெத்தியர்கள் இதனை சாகர்மாதா எனவும், நேபாள மக்கள் சோமொலுங்க்மா என்றும் அழைக்கிறார்கள். பூமத்திய ரேகைக்கு மிக அருகில் இந்த சிகரம் அமைந்துள்ளது. (அட்சரேகை கோணம் 28 டிகிரியாகும்.)

1953  ஆம் ஆண்டிலிருந்து எவரெஸ்ட் சிகரத்திற்கான பயணம் துவங்கிவிட்டது. துவக்கத்தில் மிகவும் ஆபத்தாக இருந்த பயணம் தற்போது தொழில்நுட்ப, மருத்துவ வசதிகள் பெருகிவிட்டதால் ஓரளவு பாதுகாப்பானதாகவே இருக்கிறது. இருப்பினும் இமயமலையை சாதாரணமாக கணக்கிட முடியாது. கண நேரத்தில் தனது மொத்த அழகையும் பனிப்படலத்துக்குள் மறைத்து சுற்றிச்சுழன்றடிக்கும் இயற்கையின் பேராற்றல் வெளிப்படும் இடம் அது. ஆகவே வளர்ந்துவிட்ட விஞ்ஞானத்தையும் விட இயற்கை என்றென்றும் வலிமையானது என முதல் அடியிலேயே புரிந்துகொள்வீர்கள்.

சிகரத்தின் உச்சியில் இருக்கும் பனியினால் ஆன குகை தான் இலக்கு. வார்த்தைகள் சிறியவை தான். ஆனால் இதற்கென பயிற்சி மிக முக்கியம். சுமார் நான்கு மாத பயிற்சிக்குப் பிறகே மலையேறிகள் தங்களது பயணத்தைத் துவங்குகிறார்கள்.

NEPAL-LIFESTYLE-SPORT-EXTREME-MOUNTAINEERING-EVEREST
Credit: nationalpost.com

எந்த மாதத்தில் செல்லலாம்?

மலை ஏறும் வீரர்கள் மார்ச் மாத இறுதியிலேயே நேபாள தலைநகரான காத்மாண்டு வந்துவிடுவர். அங்கிருந்து சிகரத்தின் அடிவாரத்தில் இருக்கும் குடிலுக்குச்(Base camp) செல்வர். உண்மையில் குடில் அமைந்திருக்கும் இடம் சுமார் 17700 அடி உயரமுடையதாகும். அங்கு பயிற்சி பெற்ற உதவியாளர்கள் மற்றும் அதி உயர தட்பவெட்ப நிலையை சமாளிக்கக்கூடிய பணியாளர்கள் இருக்கின்றார்கள். பயண வழிகாட்டிகளான இவர்கள், ஆக்சிஜன் சிலிண்டர், கயறு, மருத்துவ உதவிப்பெட்டி, ஏணி, உணவு போன்ற தேவைகளை மேலே வழங்குவார்கள். முதல் நாள் குடிலில் தங்கி சிகரத்தில் சிறிது தூரம் ஏறி பயிற்சி செய்யவேண்டும். சீதோஷ்ண நிலை குறித்த தகவல்களை உதவியாளர்கள் கற்பிப்பார்கள். கயிறினை பயன்படுத்துதல், தற்காலிக குடில் அமைத்தல் போன்ற பயிற்சிகள் ஒரு மாதத்திற்கு நீடிக்கும். அதன்பின்பு திரும்பவும் காத்மாண்டு வந்து ஒருவாரம் ஓய்வு. சரியாக மேமாதத்தின் இரண்டாம் வாரத்தில் அந்த நீண்ட பயணம் துவங்கும்.

அறிந்து தெளிக!!
செலவுகளைப் பொறுத்தவரை ஒரு நபருக்கு 40,000 – 1,00,000 அமெரிக்க டாலர்கள் செலவாகலாம். கட்டணத்தைப் பொறுத்து சேவைகள் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு நேபாள அரசு சுற்றுலாத்துறை இதன்மூலம் 52 லட்சம் அமெரிக்க டாலர்களை வருமானமாகப் பெற்றிருக்கிறது.

பாதைகள்

எவரெஸ்ட் சிகரத்தை அடைய மொத்தம் 17 வழிகள் இருக்கின்றன. ஆனால் பொதுவாக இரண்டு பிராதான வழிகளை மட்டுமே உதவியாளர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். ஒன்று நேபாளின் தென்கிழக்கில் இருக்கிறது. முதன்முதலில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த டென்சிங் நோர்காய் மற்றும் எட்மண்ட் ஹிலாரி இந்த வழியில் தான் பயணப்பட்டார்கள். மற்றொரு வழி திபெத்தின் வடக்குப் பகுதியில் துவங்குகிறது. இந்த வழியில் குடிலுக்கு செல்ல ஜீப் வசதி உள்ளது. இருப்பினும் இதற்குமுன் பயணித்த இரண்டு குழுக்கள் இந்த வழியில் தொலைந்து போயிருக்கிறார்கள்.

everest Route
Credit: ca.news.yahoo.com

நேபாள வழியில் சிகரத்தை அடைவதற்கான பயண நேரம் குறைவு. ஆனால் பனிப்பொழிவு சில இடங்களில் கடுமையாக இருக்கும். இப்படி இரண்டு வழிகளிலுமே இருவேறான சவால்கள் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கும்.

நீளும் பயணம்…

மலையேற்றத்தின் முதல்புள்ளி குடிலில் இருந்து துவங்குகிறது. அங்கிருந்து மட்டுமே வெளியுலகத்தை உங்களால் தொடர்புகொள்ள முடியும். பற்பசை கூட பனிக்கட்டியாய் இறுகிவிடும் அளவிற்கு குளிர் நிலவும். வியர்வையை துடைக்காமல் விட்டாலே பனிக்கட்டியாகி விடும். சிறப்பு பயிற்சிபெற்ற உணவு தயாரிப்பார்கள் சுட சுட காட்டெருமைக் கறியை சமைத்து வழங்குவர். சில நிமிடங்களில் உண்டால் மட்டுமே உண்டு. இல்லையேல் ஆறி குளிர்ச்சியான பனிக்கட்டியைத் தின்பதுபோல் ஆகிவிடும். வழிகாட்டிகள் உங்களுக்குத் தேவையான பொருட்களை வழங்கியவுடன் நடக்க ஆரம்பிக்கலாம்.

18000 அடி உயரத்தில் பனிப்புயலுக்கான வாய்ப்பு அதிகம். வெண்காடு போல பரவியிருக்கும் பனியில் எந்த புள்ளியிலும் பனிக்கட்டிகள் மொத்தமாக சரிவதற்கான வெற்றிடம் இருக்கலாம். உங்களுடைய தவறான சிறு அசைவு, திரும்பவும் ஏறமுடியாத பள்ளத்திற்கு கொண்டுசேர்த்துவிடும். அவலாஞ்சி எனப்படும் பனிச்சரிவுகள் இங்கே சாதாரணம்.

முதல் ஓய்வு (20000 அடி)

பயணத்தின் முதல் ஓய்வு அந்த உயரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். கையுறைகளை கழட்டி விரல்களை மடக்கி ரத்த ஓட்டத்தை சீராக்க முயற்சிக்க வேண்டும். மே மாத இறுதியில் நீங்கள் பயணத்தை மேற்கொண்டால் இந்த இடம் வழக்கத்தைவிட சூடாக இருக்கும். பனிக்கட்டிகளினால் எதிரொளிக்கும் சூரிய ஒளி மிகக்கடுமையான சிக்கலாக இருக்கும். ஆரம்ப புள்ளியிலிருந்து இந்த இடத்தை அடைய 4 – 7 மணி நேரம் ஆகலாம்.

how-long-does-it-take-to-climb-mt-everest
Credit: Himalayas On Foot

இரண்டாம் ஓய்வு (21000 அடி)

அங்கொன்றும் இங்கொன்றுமாக தொடர்ந்த பாறைப்பகுதிகள் இந்த இடத்தில் முடிவடைகின்றன. இங்கிருந்து பெரும்பாலும் பனி மட்டுமே. இங்கே இரண்டாம் ஓய்வு அளிக்கப்படும். வழிகாட்டி உங்களுக்கான உணவை கொடுப்பார். சிறிதுநேர உடற்பயிற்சி. சுவாசத்தை கவனிக்க வேண்டும். சிரமம் ஏதும் இருப்பதாகத் தோன்றினால் உடனடியாக தெரிவிக்கவேண்டும்.

அறிந்து தெளிக!!
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் பயணிகளின் இறப்புவிகிதம் 1.2% ஆகும். அதாவது மலையேறும் நூறு நபர்களில் சராசரியாக ஒருவர் பலியாவதாக நேபாள அரசு அறிக்கை தெரிவிக்கிறது.

மூன்றாம் ஓய்வு (22300 – 26300 அடி)

கடும் காற்று வீசும் இடம் என்பதால் மேலிருக்கும் பாறைத்துகள்கள், கற்கள் சரிந்து உங்கள் மீது விழலாம். கயிறுகளின் பலத்தினை நேரடியாக சோதித்துப்பார்க்க வேண்டிய இடம் இதுதான். மேகக்கூட்டங்கள் உங்களுக்கு கீழே அலையும். சமீபத்திய பனி இலகுவாக இருப்பதால் உங்கள் கால்கள் சிக்கி வேகத்தைக் குறைக்கும். அதேசமயம் இறுகிப்போன பனி சரியவும் வாய்ப்பு அதிகம். இனி ஒவ்வொரு அடியையும் மிக கவனமாக எடுத்துவைக்க வேண்டும். அடுத்து நீங்கள் ஓய்வெடுக்கப்போகும் இடம் அபாயகரமான இடத்திற்கெல்லாம் அப்பன்.

everestclimb
Credit: snowbrains.com

நான்காம் ஓய்வு (26000 அடி)

பயணத்தின் களைப்பினால் கால்கள் கடுமையாக வலிக்கத் துவங்கும். இங்கு நீங்கள் எடுக்கப்போகும்  சிறிதுநேர ஓய்வுதான் பயணத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும். வாழ்வா சாவா போராட்டம் கூட. திரும்புதலும் சுலபமில்லை. எனவே சிகரத்தின் உச்சிப்பயணத்திற்கு உங்களை தயார் செய்துகொள்ள வேண்டும். களைப்பு உங்களை பேசவிடாது. முடிந்த அளவு தண்ணீர் குடித்துக் கொள்ளுங்கள்.

சூரிய வெளிச்சம் குறைந்து நிலாவில் இருப்பதுபோன்ற காட்சிப்பிழை தோன்றலாம். இயற்கையின் அதி ஆபத்தான் அழகு என்றால் அது அந்த இடம்தான். மொத்த திபெத் பீடபூமியும் மங்கிய சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதனைப்பார்த்தவாறே ஓய்வினை எடுக்கலாம். அடுத்து வர இருப்பது பயணத்தின் கடைசி அத்தியாயம். சம்மிட்.

உலகின் உச்சி (29035 அடி)

பயணத்தின்போது எங்கோ தூரத்தில் புள்ளியாய் தெரிந்த இடத்தில் நீங்கள் நிற்பீர்கள். மொத்த உலகமும் உங்களுக்கு கீழே எதெதெற்கோ ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் நீங்களோ இயற்கையின் அதி உன்னதமான இடத்தில் இருப்பீர்கள். மனக்கிளர்ச்சியால் பலர் பேசமுடியாமல் அந்தக்காட்சியில் லயித்துபோவதுண்டு. உலகின் உச்சி. இதற்குமேல் யாராலும் போகமுடியாத முடிவு. கிட்டத்தட்ட மூன்று மாத உழைப்பின் பலன் உங்கள் முன்னே இருக்கும். மவுனப்பெருங்கடலில் நீந்துவதர்கான நேரம் அது. எவரெஸ்டை நீங்கள் வெற்றிகொண்டு விட்டீர்கள். காலம் குறித்த பிரக்ஞை வர சிறிதுநேரம் ஆகும். அதன்பின் பயணத்தின் கடுமையான பகுதியான மலை இறங்குதலை மேற்கொள்ளவேண்டும்.

anshu-jamsenpa-arunachal-mount-everest-twice-5-days-
Credit: India Today

கீழிறங்குதல்

எவரெஸ்ட் பயணத்தின் பெரும்பான்மையான விபத்துகள் கீழே இறங்கும் போதுதான் நிகழ்கின்றன. மேலே செல்லும் போது பயன்படுத்திய பாதையில் அடையாளங்களை விட்டுவருவது மிக அவசியம். ஏனெனில் புது அடி பயணத்தின் முடிவை மாற்றிவிடக்கூடும். பொதுவாக ஆக்சிஜன் பற்றாக்குறை இப்போதுதான் ஏற்படும். வெற்றிக்கு மிக அருகில் இருப்பதால் சில நேரங்கள் தாக்குப்பிடித்தாலே தப்பித்துவிடலாம். கவனமான முன்தேர்வுகளின் படி நடக்கவேண்டும். படிப்படியாக சூரிய ஒளி உங்களை வரவேற்கும். காற்றின் அடர்த்தி சற்று தடுமாறச் செய்தாலும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்க தயாராவீர்கள். வாழ்வின் எந்த நொடியிலும் சிலிர்ப்பை ஏற்படுத்தும் நியாபகங்களாக உங்களுடைய மூளையில் படிய இருக்கும் பயணம் முடிவு பெற்றிருக்கும். அந்தக்கணம் உங்களுக்கு வெகுதூரத்தில் இயற்கையின் பிரம்மாண்டம் வெள்ளையாய்ச் சிரிக்கும்.

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!