விசித்திரங்கள்

3 லட்சம் அமெரிக்கர்கள் நுழைய விருப்பப்படும் ஏரியா 51 ல் அப்படி என்னதான் இருக்கிறது?

பேஸ்புக், ட்விட்டர் என சமீப நாட்களாக அதிக மக்கள் பேசும் பொருள் ஏரியா 51 ஆகத்தான் இருக்கிறது. அமெரிக்காவில் ஒரு பாலைவனத்தின் மையத்தில் இருக்கும் இந்த ஆராய்ச்சி மையத்தைக் காண சுமார் 3லட்சம் மக்கள் பேஸ்புக்கில் விருப்பம் தெரிவித்திருப்பது எதற்காக? அப்படி என்னதான் இருக்கிறது அந்த ஏரியா 51 ல்? பார்க்கலாம்.

Credit: Barry King/WireImage

அமெரிக்க மாகாணமான நெவேடாவில் இருக்கிறது இந்த ஆய்வு மையம். அமெரிக்கா தயாரிக்கும் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் புதிய விமானங்கள் ஆகியவை இங்கேதான் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்க எரிசக்தி துறையினர் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளில் 90 சதவிகிதம் இங்கேதான் நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் 2013 ஆம் ஆண்டிற்கு பிறகுதான் அமெரிக்க அரசாங்கம் அப்பகுதி தங்களுக்குச் சொந்தமானது என அறிவித்தது. தன் எல்லைக்குள் இருக்கும் ஒரு பகுதியைப் பற்றிய விவரங்களை அமெரிக்கா வெளியிட தடையாக இருப்பது எது? என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு நாம் இன்னும் பின்னோக்கி பயணிக்கவேண்டும்.

1955 ஆம் ஆண்டிலேயே இந்த மர்ம ஆய்வுமையத்தை அமெரிக்கா உருவாக்கிவிட்டது. அதன்பின்னர் அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனிற்கும் இடையே நடந்த பனிப்போரின்போது இருநாடுகளும் எதிரி நாட்டை உளவு பார்க்கத் தொடங்கின. அப்படி ரஷிய விமானங்கள் மூலம் எடுக்கப்பட்ட இப்பகுதியின் புகைப்படங்கள் பல கேள்விகளை எழுப்பியது.

பறக்கும் தட்டுகள், ஏலியன்கள் குறித்த ஆராய்ச்சிகள், டெலிபோர்டேஷன் போன்ற வினோத ஆய்வுகளை அமெரிக்கா அங்கே நடத்திவருவதாக தகவல்கள் கசிந்தன. இவற்றிற்கு பிள்ளையார் சுழி போட்டு துவக்கி வைத்தது ரஷ்யாதான் என்றாலும் அமெரிக்கர்கள் விடுவதாய் தெரியவில்லை. அதன்பின்னர் அந்த இடம் ஃபேண்டசி திரைப்படத்தில் வரும் ஸ்பாட்டாக மாறியது. தினமும் ஒவ்வொரு கதைகள் எழுதப்பட்டன. நான் கூட எட்டு கைகளுடன் ஒரு பையன அந்த ஏரியாவில் பார்த்தேன் என நாடு முழுவதும் பேசப்பட்டன. அரசாங்கம் எங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல நடந்துகொண்டது. அமெரிக்கர்கள் பேசுவதற்கு புதிய புதிய விஷயங்கள் கிடைத்துக்கொண்டே இருந்ததால் இந்த ஏரியாவை தற்காலிகமாக மறந்திருந்தனர். ஆனால் தற்போது திடீரென பேஸ்புக்கில் இந்த பகுதி குறித்த ஆர்வத்தை மக்கள் கிளப்பியுள்ளனர்.

Credit:The Aviationist

வருகின்ற செப்டம்பரில் இந்த ஏரியா 51 பகுதிக்குள் நுழைய விருப்பமா என பேஸ்புக்கில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 3 லட்சம் மக்கள் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். எந்த துப்பாக்கியும் எங்களைத் தடுக்காது என வசனங்கள் வேறு தூள் பறக்கின்றன. உண்மையில் இந்த விஷயத்தை கிளப்பிவிட்டதே அமெரிக்க பாதுகாப்புத்துறை தான். கப்பற்படை கடந்த சில வாரங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத பொருள் ஒன்றைக் கண்டதாக செனட்டர்கள் சொல்ல வந்த வினை இதெல்லாம். பாதுகாப்பு பணியில் இருந்த கப்பல்களின் ரெக்கர்டர்களில் சில சமிக்கைகள் வந்திருப்பதாகவும், அவை குறித்து ஆய்வு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். உடனே மக்களும் ஏரியா 51 ஐப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஆனாலும் அரசால் தடை செய்யப்பட்ட இடத்தை சாகசத்திற்காக நெருங்குவதெல்லாம் ஆபத்து என அம்மக்கள் செப்டம்பருக்கு முன்பே புரிந்துகொண்டால் நல்லது.

Show comments