28.5 C
Chennai
Friday, April 19, 2024

அழிவிலிருந்து இந்த உலகத்தைக் காப்பதற்கான வழி கண்டுபிடிப்பு!!

Date:

நமது பூமியின் வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக்களின் அளவு தொடர்ந்து அதிகரிப்பதால், பூமி இயல்புக்கு மாறாக வெப்பமடைந்து கொண்டே இருக்கிறது. அதிலும் 1880 ல் இருந்து பூமியின் சராசரி வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸ் அல்லது 1.4 டிகிரி பாரன்ஹீட் உயர்ந்துள்ளது. இதனால் பூமியின் பருவகாலநிலை, தட்பவெப்பநிலை, இயற்கைச் சீற்ற நிகழ்வுகள் போன்றவற்றில்  மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த நிலை தொடர்ந்தால் துருவப்பகுதிகள் உருகத் துவங்கும். எங்கும் பனியே இல்லாமல் தண்ணீராக மாறும். நிலப்பகுதிகள் பெரும்பாலும் தண்ணீருக்குள் மூழ்கும். இதைத் தடுக்க எத்தனையோ ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. அதில் ஒன்றாக அமெரிக்காவைச் சேர்ந்த சில ஆராய்ச்சியாளர்கள் பூமியில் படும் சூரிய வெப்பத்தின் அளவை குறைக்க ஒரு சோதனையை மேற்கொள்ளப் போகிறார்கள்.
Global Environment Facility(1)
Credit : Global Environment Facility

பசுமை இல்ல வாயுக்கள்

பூமியின் வளிமண்டல மேல் அடுக்கில் ஒரு போர்வை போல இருக்கும் நீராவி, கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, குளோரோ புளோரோ கார்பன் உள்ளிட்ட வாயுக்கள் சூரிய வெப்பத்தை பூமிக்குள் அனுமதிக்கின்றன. அதோடு பூமியின் மேற்பரப்பில் இருந்து எதிரொளிக்கப்படும் வெப்பத்தையும் அகச்சிவப்புக் கதிர்களையும் விண்வெளிக்கு அனுமதிக்காமல் தடுப்பதால் பூமி இன்னும் வெப்பமடைகிறது. மேலும் இந்த வாயுக்களால் புற ஊதாக்கதிர்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கும் ஓசோன் அடுக்கும் பாதிக்கப்படுகிறது. சரி, வளிமண்டலத்தில்  பசுமை இல்ல வாயுக்கள் இல்லை என்றால் சரியா? என்றால் அதுவும் இல்லை. அந்த வாயுக்கள் இல்லையென்றால் பூமியின் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் குறைவாகவே இருக்கும். விளைவு எல்லாம் உறைந்து போய் உயிரினங்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும். எனவே, பூமியில் உயிரினங்கள் வாழ பசுமை இல்ல வாயுக்கள் அவசியம் தான். பூமியை மிதமான சூடான வெப்பத்தில் வைத்திருக்கும் அளவில் அவை இருக்க வேண்டும். ஆனால் தொழிற்புரட்சிக்குப் பின்  பசுமை இல்ல வாயுக்களின் அளவு மிகவும் அதிகரித்துவிட்டதால் அதிக வெப்பத்தை அப்படியே வைத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டன.
 Pinatubo எரிமலை வெடிப்பிற்குப் பிறகு  அந்த பகுதியில் சோளம், சோயா, அரிசி, கோதுமை போன்ற பயிர்களின் சாகுபடி குறைந்துள்ளதாக ஒரு சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மின் உற்பத்தி நிலையங்கள், காடுகள் அழிப்பு, எரிபொருள் உற்பத்தி, செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள், குப்பைகளில் வெளிப்படும் மீத்தேன் ஆகிய காரணங்களால் இவை அதிகரிக்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது தான் பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம். இதன் முக்கிய குறிக்கோள் பூமியின் வெப்பத்தை 2 டிகிரி குறைப்பது. இதனால் இந்த ஒப்பந்தத்தில் இணைந்திருக்கும் நாடுகள் தங்களுடைய கார்பன் வெளியேற்றத்தை கடுமையாகக் குறைக்க வேண்டும். ஆனால் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை குறைப்பது பொருளாதாரத்தில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

எரிமலை  வெடிப்பு

1991 ல் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள Pinatubo எரிமலை வெடித்த போது சுமார்  20 மில்லியன் டன் சல்பர் ஆக்சைடு ஸ்ட்ராடோஸ்பியர் அடுக்கில் போய் மெல்லிய  படலமாக சேர்ந்தது. இதனால் 18 மாதங்களுக்கு பூமியின் வெப்பநிலை 0.5 டிகிரி செல்சிஸ் குறைந்து இருந்தது. இதை ஏன் செயற்கையாக செய்யக்கூடாது என விஞ்ஞானிகள் யோசித்தனர். ஆனால் இது போன்ற முயற்சிகளை செய்யக் கூடாது என சில ஆராய்ச்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். காரணம் இதன் மூலம் பயிர்கள் பாதிக்கப்படும், பருவ மழைக் காலங்களும் மாறலாம் என எண்ணுகின்றனர். ஏனெனில் Pinatubo எரிமலை வெடிப்பிற்குப் பிறகு  அந்த பகுதியில் சோளம், சோயா, அரிசி, கோதுமை போன்ற பயிர்களின் சாகுபடி குறைந்துள்ளதாக ஒரு சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் தொடந்து வரும் புவியின் வெப்பம் எப்படியாவது அதன் வெப்பத்தை குறைத்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம் என்பதே உண்மை. 
 

ஹார்வர்ட்  திட்டம்

அமெரிக்காவின் ஹார்வர்ட் (Harvard University) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கால்சியம் கார்பனேட்டை ஸ்ட்ராடோஸ்பியர் அடுக்கில் (வளிமண்டலத்தில் இரண்டாவது அடுக்கு 10-50 கீ மீ வரை உள்ளது)  செலுத்த முடிவு செய்துள்ளார்கள். ஸ்ட்ராடோஸ்பியர் அடுக்கைத் தேர்வு செய்ய காரணம் இந்த அடுக்கில் செலுத்தப்படும் துகள்கள் தான் பூமி முழுக்க வளிமண்டலத்தில் பரவி அதிக அளவில்  சூரிய வெப்பத்தை பிரதிபலிக்கும் என்று பல ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. மிகச் சிறிய அளவு இது போல் செய்து அந்த முடிவின் மூலம் தொடர்ந்து அதிக அளவு செய்ய திட்டமிட்டுள்ளார்கள். கால்சியம் கார்பனேட்டை தேர்ந்தெடுக்கக் காரணம் கால்சியம் கார்பனேட் தான் நமக்கு அசிடிட்டியை போக்கும் பல மருந்துகளில் உள்ளது. மேலும் இது இரண்டு வருடம் வரை காற்றில் இருந்து சூரிய ஒளியை விண்வெளிக்கு திருப்பி அனுப்பி விடுமாம். கால்சியம் கார்பனேட் சல்பரை விட வெப்பத்தை குறைவாகவே எடுத்துக்கொள்ளும். ஓசோன் படம் மீதான இதன் தாக்கமும் மிக குறைவு. மேலும் கால்சியம் கார்பனேட் மக்கள் பயன்படுத்தும் பல பொருள்களில் இருப்பதால் இந்த சோதனையால் பாதிப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.  
HEAT WAVE
Credit: Pixels

SCoPEx

இந்தத் திட்டத்தின் பெயர் Stratospheric Controlled Perturbation Experiment (SCoPEx). இதன் முதல் படியாக 2019 ல் இரு விமானங்கள் தென்மேற்கு அமெரிக்காவின் வளிமண்டலத்தில் 20 கிமீ தூரத்தில் 100 கிராம் கால்சியம் கார்பனேட்டை செலுத்தி ஆராய்ச்சி செய்வார்கள். இதில் சரியான அளவுள்ள துகள்களை செலுத்துவது மிக முக்கியம். இதற்காக 0.5  மைக்ரோ மேட்டர் விட்டம் உள்ள துகள்களை செலுத்த திட்டமிட்டுள்ளது இந்த குழு. மேலும் அனுப்பப்படும் பலூன் இதை செய்து முடித்ததை உறுதி படுத்த கால்சியம் கார்பனேட் கலந்த மாதிரியை எடுத்து வருவதும் அவசியமாகும். வெளியிடப்படும் துகள்களின் எண்ணிக்கை மற்றும் அளவை அறிய எடை குறைந்த கருவிகளும், காற்றின் ஈரப்பதம் ஓசோனை அளவிட சில கருவிகளும் பலூனில் அனுப்பப்படும். கால்சியம் கார்பனேட்டை வெளியிட்ட பின் பலூனில் இருக்கும் லேசர் இமேஜிங் அமைப்பு எப்படி கால்சியம் கார்பனேட் துகள்கள் பரவுகின்றன என்பதைக் காட்டும். இதன் மூலம் அதிக அளவு  கால்சியம் கார்பனேட் செலுத்தினால் என்ன நடக்கும் என ஆராய்ச்சியாளர்களால் அறிய முடியும். இந்த திட்டம் செய்து முடிக்கப்பட்டால் ஹார்வேர்ட்  குழு தான் முதலில் (solar geo engineering) இது போன்ற தொழில்நுட்பத்தை ஸ்ட்ராடோஸ்பியர் வரை கொண்டு சென்ற குழு என்ற பெருமையை பெரும். 
 
இது போன்ற செயல்கள் ஒரு தற்காலிக தீர்வு தான். உண்மையில் புவி வெப்பமாவதையும், பருவநிலை மாற்றத்தையும்  தடுக்க நிரந்தர தீர்வை கையாள வேண்டும் என்கிறார்கள்  சிலர். அதே சமயம் சிலர் இதனால் நிரந்தர தீர்வை அடைவதற்கான, ஆராய்ச்சிகள் செய்ய நமக்கு கொஞ்சம் கால அவகாசம் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!