அரசியல் & சமூகம்

1000 கிலோ வெடிமருந்து – பாகிஸ்தானை கலங்கடித்த இந்தியா

ஜம்மு கஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி, இந்திய துணை ராணுவப்படையினர் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40க்கும் அதிகமான துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும்  அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது. பாகிஸ்தானை மையமாகக்கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.

வர்த்தக ரீதியில் பதிலடி அளித்த இந்தியா தனது ஏற்றுமதி பொருட்களை நிறுத்தி வைத்தது. “மேலும் தீவிரவாதிகளின் இச்செயலுக்கு இந்தியா நிச்சயம் பதிலடி தரும். 44 வீரர்களின் மரணம் நெஞ்சில் ரணமாக இருப்பதாக” பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

பதிலடி

இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் எல்லை யோரம் அமைக்கப்பட்டு இருந்த பயங்கரவாதிகளின் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் 12 மிராஜ் 2000 (Mirage 2000 jets) போர் விமானங்கள் மூலம் பயங்கரவாதிகளின் முக்கிய முகாம்கள் மீது சுமார் 1000 கிலோ வெடிபொருள் அடங்கிய குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்த தாக்குதல் குறித்து பேசியுள்ள இந்திய ராணுவம், “தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்த இந்தியாவுக்கு முழு உரிமை உள்ளது. இனியும் இப்படி நடக்கும்” என தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் எதிர்பார்க்காத நிலையில் இந்தியாவின் இந்த அதிரடி தாக்குதலால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இந்த தாக்குதலில் சுமார் 200 – 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறிந்து தெளிக!
இந்த தாக்குதல் குறித்து பிரதமர் மோடி கூறுகையில் முழு சுதந்திரத்தை கொடுக்கிறேன். இந்தியா மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் போர் நடத்தும்விதமாக 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் எல்லை கோட்டு பகுதியில் ஒத்திகை நடத்தி வந்தன.

தாக்குதல் தொடரும்

இந்தியாவின் பதிலடி இந்தத் தாக்குதலோடு  நின்றுவிடாது என இந்தியா ராணுவம் அறிவித்திருக்கிறது. இந்நிலையில் பிரதமர் மோடி தனது இல்லத்தில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன், சுஷ்மா ஸ்வராஜ் , தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட விவரங்கள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்திய ராணுவத்தின் இந்த அதிரடித் தாக்குதலுக்கு சமூக வலைதளங்களில் மக்கள் ஆதரவும் மகிழ்ச்சியும் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்திய பிரபலங்கள் பலரும் இந்திய ராணுவத்தினை வாழ்த்தி செய்திகளை பதிவு செய்து வருகிறார்கள்.

Show comments