அரசியல் & சமூகம்

தி.மு.க கூட்டணிக்கு சாதகமாகும் கருத்துக் கணிப்புகள்!!

லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்களினால் நடத்தப்படும் பண்பாடு மக்கள் தொடர்பகம் சார்பில் தமிழகம் முழுவதும் தேர்தலுக்கான கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டிருக்கின்றன. 18 சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் சேர்த்தே இந்த கருத்துக்கணிப்பானது நடத்தப்பட்டிருக்கிறது. இதில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் முன்னிலை பெரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Credit: The News Minute

நாடாளுமன்றத் தேர்தல்

லயோலா கல்லூரி முன்னாள் மாணவரான சி.திருநாவுக்கரசு அவர்களின் தலைமையின் கீழ் பண்பாடு மக்கள் தொடர்பகம் தமிழகம் முழுவதும் உள்ள 40  தொகுதிகளிலும் கருத்துக்கணிப்பினை நடத்தியுள்ளது. மார்ச் 17 முதல் ஏப்ரல் 3 வரை இதற்கான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் செயல்பாடுகள், நலத்திட்டங்களில் தமிழக அரசின் மீது மக்களின் மதிப்பீடு குறித்தும் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

  • தற்போதைய அதிமுக அரசு தாக்குப் பிடிக்கக் காரணம் என்ன? என்ற கேள்விக்கு பாஜகவின் தலையீடு என 50% மக்களும், முதல்வரின் ஆளுமை காரணம் என 38% பேரும் தெரிவித்துள்ளனர்.
  • 2019-ல் யார் அடுத்த பிரதமராக வர வேண்டும் என்ற கேள்விக்கு 35.75% பேர் ராகுல் காந்தி, 27.9% பேர் மோடி, 7.1% பேர் மன்மோகன் சிங், 4.4% பேர் பிரியங்கா காந்தி, 4.22% பேர் மம்தா பானர்ஜிக்கும் வாக்களித்துள்ளனர்.
  • மக்களவைத் தோ்தலுக்குப் பின்னா் ஆட்சி மாற்றம் ஏற்படும் பட்சத்தில் அடுத்த முதல்வராக யாா் வரவேண்டும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு திமுக தலைவா் ஸ்டாலின் என்று 31 சதவிகித மக்களும், பன்னீா்செல்வம், பழனிசாமி அணி என்று 22 சதவிகிதம் மக்களும், அமமுக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் வரவேண்டும் என்று 20 சதவிகித மக்களும் விருப்பம் தொிவித்துள்ளனா்.
  • ஜிஎஸ்டி, சரிந்து வரும் வேலைவாய்ப்புகள், சமஸ்கிருத திணிப்பு உள்ளிட்டவை பாஜக அரசின் மீதான அதிருப்திக்கு காரணம் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில், திமுக தலைமையிலான கூட்டணி 27 முதல் 33 வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது எனவும், அதிமுக தலைமையிலான கூட்டணி 3 முதல் 5 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது எனவும், அமமுக தலைமையிலான கூட்டணி 1-2 தொகுதியில் வெற்றி பெற வாய்ப்புள்ளது எனவும் அந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது.

திமுக

திருவள்ளூர் (தனி), ஸ்ரீபெரும்புதூர், , காஞ்சிபுரம், அரக்கோணம், மத்திய சென்னை, தென் சென்னை, தருமபுரி, வட சென்னை,திருவண்ணாமலை, ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி (தனி), பொள்ளாச்சி, ஆரணி,விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி (தனி), புதுச்சேரி, மதுரை, தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர், கரூர், கடலூர், சிதம்பரம் (தனி), பெரம்பலூர் ஆகிய இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் கோலோச்சும் என கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

அதிமுக

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேலூர், கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, நாகப்பட்டினம் (தனி), மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்புள்ளது.

அமமுக

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேனி, திருச்சி ஆகிய இடங்களில் வெற்றிபெறலாம்.

திருப்பூர் மாவட்டத்தின் நிலையைக் கணிக்க முடியவில்லை என அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல்

18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 9 முதல் 11 தொகுதியில் வெற்றிப்பெற வாய்ப்புள்ளது என கருத்துக்கணிப்பில் தெரியவந்திருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் தற்போது வெளிவந்துள்ள இந்த கருத்துக்கணிப்பு அரசியல் உலகில் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Show comments