28.5 C
Chennai
Friday, April 19, 2024

பெற்றோர்கள் குழந்தைகளை கட்டி அணைப்பதால் ஏற்படும் 10 நன்மைகள்

Date:

சில நாட்களுக்கு முன்பு வெளியான ‘எளிய முறையில் உங்கள் குழந்தைகளுக்கு படிக்க கற்றுத்தருவது எப்படி?’ என்ற கட்டுரைக்கு பலரும் முகநூல் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம், பாராட்டுக்களை தெரிவித்திருக்கின்றனர். அனைவருக்கும் மிக்க நன்றி.

Contents hide

உங்கள் பாராட்டுக்கள் தந்த உந்துதலுடன், இப்போது குழந்தை வளர்ப்பு தொடர்பான மற்றொரு முக்கியமான கட்டுரையை பார்ப்போம். குழந்தைகளைப் பெற்றோர்கள் கட்டிப்பிடிப்பதன் அவசியத்தை பற்றி எழுதுவதாக கடந்த பதிவில் கூறியிருந்தேன். அதனால், இப்போது அந்த கட்டிப்பிடி வைத்தியம் பற்றி பார்க்கலாம்.

மனிதர்களும், விலங்குகளும் தோன்றிய காலம் தொட்டே அன்பை வெளிப்படுத்துவதற்கான பொதுவான உடல்மொழி கட்டிப்பிடிப்பதாகத்தான் இருக்கக்கூடும். அன்பை வெளிப்படுத்த இப்பேரண்டத்திற்கே பொதுவாய் கிடைத்த உடல்மொழி கட்டிப்பிடிப்பது தான்.

பல விலங்குகள், பறவைகள் அன்பை வெளிப்படுத்த கட்டிப்பிடிப்பதையும், நாவால் நக்குவதையும் நாம் பார்த்திருக்கலாம்.. நாம் முத்தம் கொடுப்பதைப்போல், விலங்குகள் சில நாவால் நக்கி அன்பை வெளிப்படுத்துகின்றன.

அன்பை வெளிப்படுத்த இப்பேரண்டத்திற்கே பொதுவாய் கிடைத்த உடல்மொழி கட்டிப்பிடிப்பது தான்.

சரி! கட்டிப்பிடிப்பதன் மூலம் குழந்தைக்கும் பெற்றோர்க்கும் கிடைக்கும் 10 நன்மைகளை இப்போது காண்போம். நமது தளத்துக்கே உரிய தெளிவான விளக்கத்துடன், அறிவியல் ஆய்வு முடிவுகள் மூலம் கட்டிப்பிடிப்பதன் நன்மைகளை வலுவாகக் கூற விரும்புகிறேன்.

1. கட்டி அணைப்பது குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது

பெற்றோர்கள் கட்டிப்பிடித்தால் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் குதூகலமும் அடைகிறார்கள். அதற்குக் காரணம், கட்டிப்பிடித்ததும் நம் உடல் மகிழ்ச்சி தரக்கூடிய ஹார்மோன்களை வெளியிடுவது தான். ஆக்ஃசிடாசின் (Oxytocin) என்ற அந்த ஹார்மோன், “Love Hormone” என்றே பெரும்பாலும் அழைக்கப்படுகிறது.

பொதுவாக மனிதர்களை 8 நொடிகளுக்கு அன்புடன் கட்டித் தழுவும் போது, ஆக்ஃசிடாசின் சுரப்பதாக மூளை தொடர்பான ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.

hugging-each-other
Image used under license from Freestock.com

2. கட்டி அணைப்பது குழந்தைகளுக்கு நம்பிக்கையைத் தருகிறது

குழந்தைகளுக்கு எப்போதும் தேவை நம்பிக்கை. நம் அனைவருக்கும் தான். தங்களைக் கவனிக்க சிறந்த பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டியது பெற்றோர்களது கடமை. அப்போதுதான் குழந்தைகள் எதையும் சிறப்பாக செய்வார்கள். அவ்வப்போது கட்டிப்பிடித்து பாராட்டுவது அவர்களுக்கு ஊக்கத்துடன் நம்பிக்கையையும் தருகிறது.

குழந்தைகள் கீழே விழுந்த பின் எழுந்து தேடுவது அரவணைப்பைத்தான். பெற்றோர்கள் கட்டி அணைக்காவிட்டால் குழந்தைகள் வேறு யாரிடமாவது அரவணைப்பை தேடுவார்கள். அரவணைப்பின் மூலம் அவர்கள் பெற நினைப்பது எல்லாமே அன்பை மட்டுமே. நீங்கள் காட்டும் அன்பு அவர்களுக்கு பெரும் நம்பிக்கையை தரும்.

3. கட்டி அணைப்பது குழந்தைகளுக்கு பாதுகாப்பைத் தருகிறது

குழந்தைகள் பயப்படுவது இயற்கைக்கு தான். காதல் மனைவி பல்லியையோ அல்லது கரப்பான் பூச்சியையோ கண்டதும் வரும் பயத்தில் கத்திக் கூச்சல் போட்டு, ஓடிச்சென்று உடனே காதல் கணவனை கட்டிப் பிடித்துக்கொள்கிறாள். பெரியவர்களே பாதுகாப்பிற்காக கட்டிப்பிடிக்கும் போது, குழந்தைகள் கட்டிப்பிடிப்பது எதற்கென்று நாம் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா?

குழந்தைகள் பயத்துடனோ, பதற்றத்துடனோ இருக்கும் போது அவர்கள் தேடுவது தங்களது நிஜ ஹீரோவான பெற்றோரைத் தான். அவர்களுக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது, இயற்கையிலே பாதுகாப்பான இடம் பெற்றோர் மடி என்று.

4. கட்டி அணைப்பது குழந்தைகள் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது

கட்டிப்பிடிப்பதால் மூளை வளரும். என்னய்யா இது? ‘கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ ஓடும்’ என்பது போல் இருக்கிறதே என்கிறீர்களா?

அறிவியல் ஆராய்ச்சி கூறுவதைப் பாருங்கள். இங்கே தரப்பட்டுள்ள, 3 வயது குழந்தைகளின் மூளையின் படத்தைப் பாருங்கள். இடது புறம் இருப்பது அன்புடன் வளர்க்கப்பட்ட குழந்தையுடைய மூளையின் படம். வயதுக்கேற்ற வளர்ச்சியுடன் இருக்கிறது. வலது புறம் இருப்பது சரியாக கவனிக்கப்படாமல் வளர்க்கப்பட்ட குழந்தையுடைய மூளையின் படம்.

brain-development-of-3-years-old-good-parenting-vs-bad-parenting
இடது புறம் – அன்புடன் வளர்க்கப்பட்ட குழந்தையுடைய மூளையின் படம்.  வலது புறம் – சரியாக கவனிக்கப்படாமல் வளர்க்கப்பட்ட குழந்தையுடைய மூளையின் படம். Credit: MedicalDaily / Bruce D. Perry, M.D., Ph.D./Ch

வயதுக்கேற்ற சரியான மூளை வளர்ச்சி, குழந்தைகளை மிடுக்கானவர்களாக (Smart) ஆக்குகிறது.

5. கட்டி அணைப்பது குழந்தைகள் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது

பெற்றோர்கள் அதிகம் தூக்கி கொஞ்சாத, கட்டி அணைக்காத குழந்தைகள் நல்ல சத்துள்ள உணவுகளையே உண்டாலும் அதிகம் வளர்வதில்லையாம். குழந்தைகள் மருத்துவர்களால் failure-to-thrive (FTT) என்று அழைக்கப்படும் வளர்ச்சிக்குறைபாடு பிரச்சினைக்கு அக்குழந்தைகள் ஆளாகிறார்கள் என்றும் மருத்துவ அறிவியல் கூறுகிறது. மனிதர்களின் அரவணைப்பு  மட்டுமே இப்பிரச்சினையை சரி செய்ய வல்லது.

இது எவ்வாறு சாத்தியம் எனில், கட்டிப்பிடிப்பதால் உற்பத்தியாகும் ஆக்ஃசிடாசின் குழந்தைகள் வளர்வதற்கும் காரணியாக இருக்கிறதாம். ஆக்ஃசிடாசின் அதிகரிக்கும் போது, வளர்ச்சி தொடர்பான சில ஹார்மோன்கள் (IGF-1, NGF) அதிகம் சுரப்பதால் உடல் வளர்ச்சி பெறும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

விர்ஜினியா சாடிர் என்ற மனவியல் சிகிச்சை நிபுணர் கூறும் இந்த மேற்கோள் மிகவும் பிரபலம்.

நாளொன்றுக்கு 4 அணைப்புகள் தேவை நாம் வாழ்வதற்கு. நாளொன்றுக்கு 8 அணைப்புகள் தேவை நாம் நல்ல நிலையைப் பேண. நாளொன்றுக்கு 12 அணைப்புகள் தேவை நாம் வளர்வதற்கு. – விர்ஜினியா சாடிர்

6. கட்டி அணைப்பது குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை குறைக்கிறது

ஆக்ஃசிடாசின், மூளையின் உணர்ச்சி மையத்தில் செயல்பட்டு மனநிறைவு அடைய வைக்கிறது. இது மேலும், பதட்டம் குறைக்கும் ஒரு காரணியாகவும் இருக்கிறது.

கட்டிப்பிடிக்கும் போது, நமது தோலின் கீழ் உள்ள அழுத்த உணர்வேற்பிகள்(Pressure Receptors), மூளையில் இருக்கும் வேகஸ் நரம்புக்கு (Vegus Nerve) ஒரு செய்தியை அனுப்புகிறது. உடனே, வேகஸ் நரம்பு இதயத் துடிப்பை சீராக்குகிறது. இதனால், குழந்தைகள் விரைவில் மன அழுத்தம் நீங்கி மீண்டும் நல்ல நிலைக்குத் திரும்புகிறார்கள்.

கார்டிசால்(Cortisol) எனும் ஒரு ஹார்மோன், மனிதர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் போது சுரக்கும். கட்டிப்பிடிப்பதால் மன அழுத்தம் இல்லாமல் போவதால் கார்டிசால் சுரப்பையும் குறைக்கிறது.

இதனால் தான், மன அழுத்த மேலாண்மை நிபுணர்கள், மன அழுத்தத்தை குறைக்க அடிக்கடி கட்டிப் பிடிப்பது அவசியம் என்று பரிந்துரைக்கிறார்கள்.

7. கட்டிப்பிடித்தால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகும்

மன அழுத்தம் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவிழக்கச் செய்யும் என்பது நாம் அறிந்த உண்மை. கார்னெகி மெலன் பல்கலைக்கழக மனோதத்துவ நிபுணர்கள் செய்த ஆராய்ச்சியின் முடிவு கட்டிப்பிடிப்பதால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிப்பதாக கூறுகிறது.

மேலும் ஒரு ஆராய்ச்சி, அடிக்கடி கட்டிப்பிடிப்பதால் செரடோனின்(Serotonin) சுரந்து வலியைக் குறைப்பதாகவும் கூறுகிறது.

affectionate-father-with-daughter
Image used under license from Freestock.com

மகிழ்ச்சியானவர்கள் யாரும் மருத்துவமனை செல்வதில்லை என்பதை நினைவில் கொள்க.

8. கட்டி அணைப்பது குழந்தைகள் உணர்வை நாம் புரிந்து கொள்ள உதவுகிறது

ஒரு நாளைக்கு எத்தனை முறை கட்டிப்பிடிக்க வேண்டும் என்று உங்கள் குழந்தையிடம் கேட்டுப்பாருங்கள். 6 வயதுக்குட்பட்ட பல குழந்தைகள் 10 முறை அல்லது அதற்கு மேலும் என்று கூறுவார்கள். அத்தனை முறையும் கட்டிப்பிடித்து அவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். கீழே விழுந்த குழந்தையிடம் நீங்கள் புரிந்துகொள்வது அவர்களது வலியை. அடிக்கடி அணைப்பதன் மூலம் நீங்கள் அவர்களை நன்கு புரிந்துகொள்ளலாம்.

dad-mom-kid-kissing

9. குழந்தைகள் பெற்றோரைப் புரிந்துகொள்ள உதவுகிறது

நீங்கள் உங்கள் எண்ணங்களை உங்களது அடுத்த தலைமுறைக்கு கடத்த ஒரு சிறந்த ஊடகம் உடல்மொழி. நீங்கள் பரபரப்பாக அலுவலக வேலை, வீட்டு வேலை என்று ஓடிக் கொண்டிருக்கையில் உங்கள் குழந்தைகளை சரிவர கவனிக்க முடியாது. அவர்களிடம் கொஞ்சி விளையாட நேரம் இருக்காது; பேச நேரம் இருக்காது. அவர்கள் குழந்தைகள் என்பதால் அது ஏக்கமாக உருவெடுக்கும். அப்போது நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கட்டி அணைப்பது தான். உங்களுக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் கட்டி அணையுங்கள். நீங்கள் பேசவே தேவை இல்லை. அவர்களே உங்களின் மனநிலையைப் புரிந்துகொள்வர்.

10. கட்டிப்பிடிப்பது குழந்தைகளிடம் பிணைப்பை உருவாக்குகிறது

மேற்கண்ட அணைத்து நன்மைகளாலும் குழந்தைகளிடம் பெற்றோர் மேல் ஈர்ப்பும், பாசப் பிணைப்பும்  அதிகமாகும்.

சிலர் வெளியூர்களுக்கு அல்லது வெளிநாடுகளுக்குசென்று விடுவர். அப்போதெல்லாம் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். அரசியல்வாதிகள் அடிக்கடி கருத்துக்களை கூறி ‘Political Mileage’ தேடுவது போல், ஸ்கைப், வாட்ஸ்அப் காணொளி அழைப்புகள் மூலம் குழந்தைகளை கட்டி அணைத்து ‘Love Mileage’ தேடிக்கொள்ளுங்கள்.

cute-scene-in-deiva-thirumakal


இவ்வளவு நன்மைகள் உள்ளனவா கட்டிப்பிடிப்பதில் என்று ஆச்சரியத்தில் மூழ்கி விட்டீர்களா? அன்னையர் தினம், தந்தையர் தினம், குழந்தைகள் தினம் போல் கட்டிப்பிடிப்பதற்கும் ஒரு நாள் இருந்தால் நன்றாக இருக்குமே என்கிறீர்களா? அப்படியொரு தினம் இருக்கிறது. அது ஜனவரி 21-ம் தேதியன்று உலகெங்கும் பலரையும் கட்டிப்பிடித்து ‘கட்டிப்பிடி தினமாக’ பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.

கட்டிப்பிடி வைத்தியம் போல் பலன் தர மேலும் சில செயல்கள் உள்ளன; நீங்கள் பாராட்டும் நோக்கில் பிறரது முதுகில் தட்டினாலும், மகிழ்ச்சியுடன் கை குலுக்கினாலும் அதே அளவுக்கு பலன்கள் கிடைக்கும். தொடுபவருக்கும், தொடப்பட்டவருக்கும் கிடைக்கும்பெரும் பலன்கள் மகிழ்ச்சி, அமைதி, மற்றும் நல்வாழ்வு ஆகியவை.

வாழ்க வளமுடன்!

உண்மையான பெற்றோர் என்றால் ‘ஷேர்’ செய்யவும். 🙂 . இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துகளையும் கீழே உள்ள முகநூல் கமெண்ட் பாக்ஸ் மூலம் தெரிவிக்கவும். 

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!