வரலாறு

2000 டன் வெடிகுண்டுகள்: சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி – மீண்டும் பதற்றத்தில் ஜெர்மனி

ஐரோப்பிய கண்டத்தின் கோடைகாலம் முடியும் தருவாயில் உள்ளது. ஆப்பிரிக்காவின் சஹாரா வழியே ஐரோப்பா நோக்கி கடும் அனல் காற்று வீசிவருகிறது. இதனால் ஐரோப்பா கண்டத்திலிருக்கும் எல்லா நாடுகளிலும் வெயிலின் அளவு கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அங்கிருக்கும் எல்லா நீர்நிலைகளும் வேகமாக வற்றிவருகின்றன.  மத்திய ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் சில ஆறுகள் நீரில்லாமல் வறண்டு போய் காணப்படுகிறது. இப்படி நீர்மட்டம் குறைந்துபோன நதிகளில் ஆங்காங்கே  பழைய வெடிகுண்டுகள் குவியல் குவியலாக கிடப்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகி  வருகின்றனர்.

 

credit: DAILY MAIL

இரண்டாம் உலகப்போரின் போது,  ஜெர்மனி மீது  வீசப்பட்ட இக்குண்டுகள் தொடர்ந்து அப்பகுதிகளிலிருந்து கண்டறியப்பபட்டு,  அகற்றப்பட்டுக் கொண்டிருப்பதால்  ஜெர்மனி மக்கள் பதற்றத்தில் மூழ்கியுள்ளனர்.

இரண்டாம் உலகப்போரின் எச்சங்கள்

1945 – ம் வருடம் உலகப்போர் அதன் உச்ச கட்டத்தை எட்டியிருந்தது. ஒரு புறம் வின்ஸ்டன் சர்ச்சிலின் கனல் தெறிக்கும் பேச்சினால்  உத்வேகம் பெற்ற  பிரிட்டன் , ஜெர்மனியை கலங்கடித்துக்கொண்டிருந்தது. மற்றொரு புறம் ரஷ்யாவின் மீது படையெடுத்துச்சென்ற ஜெர்மனி வீரர்கள் ரஷ்யாவின் கடுங்குளிரை தாங்கவும் முடியாமல் பின்வாங்கவும் முடியாமல் மடிந்து  கொண்டிருந்தனர். ஹிட்லருக்கு பாடம் புகட்டியே ஆகவேண்டும் என எல்லா நட்பு நாட்டு தலைவர்களும் ஒருசேர களத்தில் இறங்கியிருந்தனர்.  என்ன செய்யலாம்? யோசித்தார்கள் . முடிவு எடுக்கப்பட்டது. போர்விமானங்கள் இறக்கைகளை அகலமாய் விரித்துப்  பறக்க தயாராய் இருந்தன.

credit: SMITHSONIAN

1945 – ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 – ஆம் தேதி அமெரிக்க , ரஷிய விமானங்கள் அந்நகரத்தின் வானத்தை ஆக்கிரமித்திருந்தன. காலை 10 மணிக்கெல்லாம் குண்டுமழை பொழியத் துவங்கிவிட்டது.

அறிந்து தெளிக!
மார்ச் 15 ஆம் தேதி, பிற்பகல் 2.51 முதல் 3.36 மணி வரை மட்டும்  அமெரிக்க ரஷிய விமானங்கள் வீசிய குண்டுகளின் மொத்த எடை  சுமார் 1500 டன்!!.

600 போர் விமானங்கள் தங்கள் வயிற்றில் அடைகாத்திருந்த வெடிகுண்டு முட்டைகளை வீசிக்கொண்டே இருந்தன.  ரயில் பாதைகள், ஆயுத தொழிற்சாலைகள், கைதிகளை சித்தரவதை செய்யும் இடமான கான்செண்ட்ரேஷன் கேம்புகள் (concentration camp) எனக் கொடுக்கப்பட்ட இலக்கை சிதறடித்தன அவ்விமானங்கள்.  நொறுங்கிப்போனது நகரம். இவ்விமான தாக்குதல்கள் செப்டம்பர் முதல் தேதி வரை அதாவது இரண்டாம் உலகப்போர் முடியும் வரை தொடர்ந்தன. போரின் முடிவில் ஜெர்மனியின் வரைபடம் மாறிப்போனது.

ஆறாத வடு

இப்படி ஒட்டு மொத்த ஜெர்மனி முழுவதும் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் பல்லாயிரக்கணக்கானோர்  இறந்துபோனார்கள். ஹிட்லர்  தற்கொலை செய்து கொண்டார். ஒரு  வழியாக போர் முடிவுக்கு வந்தது. ஆனால், ஜெர்மனியின் நிலப்பரப்பில் விழுந்த மொத்த வெடிகுண்டுகளில் 10% வெடிக்காமல் அப்படியே மண்ணுக்குள் புதைந்து போயின.  பெரு மழையினால் அவை ஆறுநோக்கி  அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இன்னும் ஜெர்மனியில் 2000 டன் வெடிகுண்டுகள் அப்புறப்படுத்தப்படாமல் இருப்பதாக அந்நாட்டு காவல் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது.

2011 – ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஏற்பட்ட வறட்சியின் போது  ரெயின் (rhine) நதியிலிருந்து சுமார் 1.8 டன்  எடையுள்ள வெடிமருந்துகள் அகற்றப்பட்டதும், அதன் காரணமாக பாதுகாப்பு கருதி 45000 மக்கள் வெளியேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இன்றும்  கட்டடம் கட்ட, தூர்வார மண்ணைத் தோண்டும் போதெல்லாம் வெடிகுண்டுகள் அள்ள அள்ளக் குறையாமல் கிடைத்து வருகின்றன.

அறிந்து தெளிக!
  • 2017 ஆம் ஆண்டு மத்திய ஜெர்மனியில் இருக்கும் நகரமான ஃ பிராங்பர்ட் (frankfurt) ல் 1814 கிலோ வெடிமருந்துகள் இருப்பதை உறுதி செய்த அதிகாரிகள் அங்கிருந்த 70000 மக்களை வேறு பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர செய்தனர்.
  • படெர்பர்ன் (Paderborn) நகர்த்திலும்  கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.8 டன்  எடையுள்ள வெடிமருந்துகளை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். அங்கிருந்து புலம் பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை 26000!!

ஜெர்மானிய காவல் துறை மக்களை பொது இடங்களில் கிடைக்கும் எந்த பொருளையும் தொட வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர். இன்னும் ஜெர்மனியில் 2000 டன் வெடிகுண்டுகள் அப்புறப்படுத்தப்படாமல் இருப்பதாக அந்நாட்டு காவல் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது.

credit: SMITHSONIAN

இரண்டாம் உலகப்போர்  முடிந்து 73 ஆண்டுகள் கடந்து விட்டது. எத்தனையோ புது தேசங்கள் உருவாகிவிட்டன. ஆனாலும்  போரின் பாதிப்புகளிலிருந்து இன்றும்  ஜெர்மனி முழுமையாக விலகவில்லை.  போர் துறந்த, ஆயுதங்கள் களைந்த அமைதியான ஒரு பெருவாழ்வை வாழ மனித சமுதாயம் விரும்பும் பட்சத்தில், இவ்வுலகமும் தன்  பெயரை மாற்றியிருக்கும் சொர்க்கமென்று.

Show comments