வரலாறு

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1033 – ஆம் ஆண்டு சதய விழா

சோழர் குலத்தின் மாணிக்கம் எனக் குறிப்பிடப்படும் ராஜராஜ சோழனின் 1033 – ஆம் ஆண்டு சதய விழா இன்று தஞ்சையில் உள்ள பெரிய கோவிலில் துவங்கியது. மேலும் நாளை பெருவுடையார் பெரிய நாயகி திருமேனிகளுக்கு 42 திரவிய அபிஷேகங்கள் நடைபெற இருக்கின்றன. சமீபத்தில் காணாமல் போன 150 கோடி மதிப்புள்ள ராஜ ராஜ சோழன் மற்றும் லோகமாதேவி திருச்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து வரும் சதய விழா இது என்பதால் மக்களிடையே இவ்விழா பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

Credit: Samayam

பொன்னியின் செல்வன்

சுந்தர சோழனுக்கும் வானவன் மாதேவிக்கும் இரண்டாவதாய் பிறந்தவர் ராஜ ராஜ சோழன். அருண்மொழிவர்மன் என்னும் பெயரே முதலில் அவருக்கு வைக்கப்பட்டது. பதவியேற்ற பின்னர் அவரது அரும்பெரும் சாதனைகளை குறிப்பிடும் விதத்தில் ராஜ ராஜன் என்னும் பட்டம் கொடுக்கப்பட்டது. இடைக்காலச் சோழர்களில் விஜயாலய சோழனிற்குப் பின் புகழ்பெற்ற அரசன் ராஜ ராஜ சோழன் தான். சுந்தர சோழரின் மூத்த மகன் இரண்டாம் ஆதித்தன் கொலை செய்யப்பட்ட பின்னர் உத்தம சோழர் அரசரானார். அதிலிருந்து 15 ஆண்டுகள் கழித்து ராஜ ராஜன் பதவியேற்றுக்கொண்டார்.

ராஷ்டிரக் கூடர்களின் வடக்கு எல்லை படையெடுப்பு, பாண்டியர்களின் உதவியுடன் இலங்கையை ஆண்ட மஹிந்தனின் தொல்லைகள், ஆதித்தன் இறந்ததால் நிகழ்ந்துகொண்டிருந்த உள்நாட்டுக் குழப்பங்கள் எனக் கடினமான அரசியல் சூழ்நிலையில் பதவிக்கு வந்தார் ராஜ ராஜன். பராந்தகனுக்குப் பின் வடக்கே அதிக எல்லைகளை வென்றவர் ராஜ ராஜ சோழன் தான். ஆட்சிக்காலம் முழுவதும் போர்க்களத்தில் எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாய் இருந்தார் என்றால் மிகையில்லை.

Credit: Quora

சதய நாள்

பதவியேற்ற மூன்றாம் ஆண்டிலிருந்து அவருக்கு ராஜ ராஜ சோழர் பட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சதய விழாவானது கேரளத்தில் நடந்த போருக்குப் பின்னர் தான் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உண்மையில் ராஜ ராஜனின் புகழுக்கு விடப்பட்ட சவாலை ராஜ ராஜன் ஏற்றுக்கொண்ட தினம் அது.

சேர நாட்டிற்கு அனுப்பப்பட்ட சோழ நாட்டைச் சேர்ந்த தூதுவரை அவமதித்தது சேர நாடு. தகவல் கிடைத்த நேரத்தில் ராஜ ராஜனின் பெரும்படை படையெடுத்துக் கிளம்பியது. 18 அடர் காடுகளைக் கடந்து சேர மன்னனின் கோட்டையை சோழர் படை தீயிட்டுக் கொளுத்தியது என்கிறது வரலாறு. இப்படையெடுப்பினைப் பற்றி தனது மூவர் உலாவில் ஒட்டக்கூத்தர் குறிப்பிடுகிறார். அன்றிலிருந்து ராஜ ராஜனின் சதய விழா சோழர் கட்டுப்ப்பாட்டுக்குக் கீழ் உள்ள எல்லா இடங்களிலும் கொண்டாடப்பட்டது.

 

 

Show comments