வரலாறு

குழந்தைகளின் விருப்ப உணவான பாப்கார்னின் சுவையான வரலாறு

போன தலைமுறையினருக்கு திரையரங்குகளில் விற்கப்படும் ஒரு நொறுக்குத் தீனியாக பாப்கார்ன் அறிமுகமாயிருக்கும். ஆனால், இப்போது எல்லா இடங்களிலும் பாப்கார்ன் வியாபாரம் சக்கைப்போடு போடுகிறது. காரணம், பாப்கார்னை விட பாப்கார்ன் பிரியர்கள் எண்ணிக்கை  அதிகமானது தான். உலகமெங்கிலும் அதிக மக்களால் விரும்பப்படும் உணவுப் பொருளாக இது உள்ளது. இந்தக் கட்டுரையைக் கூட கடைவாயில் பாப்கார்னுடன் படிப்பவர்கள் இருக்கலாம். அந்தளவிற்கு பாப்கார்ன் நம் பாரம்பரியத்தில் ஒன்றிப்போய்விட்டது.

Credit: Airfun Games

10,000 வருட பாரம்பரியம்

பழைய மெக்ஸிகோ பகுதிகளில் 10,000 வருடத்திற்கு முன்பே  பாப்கார்ன் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், அதற்குப் போதிய சான்றுகள் கிடைக்கவில்லை. எனவே, பாப்கார்னின் வரலாறு 1000 வருடத்திற்கு முந்தய பெரு நாட்டில் இருந்து துவங்குகிறது. நாடோடியாக வாழ்ந்த அம்மக்கள் மண்ணைச் சுட வைத்து அதில் சோளத்தைப் பொரித்து உண்டிருக்கிறார்கள். காலப்போக்கில் அமெரிக்க – ஐரோப்பிய மக்கள் அனைவரிடத்தும் சோளத்தினைப் பொரித்து உண்ணும் வழக்கம் வந்துவிட்டது.

அறிந்து தெளிக !
உலகில் அதிக அளவு பாப்கார்னை ருசிப்பவர்கள் அமெரிக்கர்கள் தானாம். வருடத்திற்கு 50,000 கிலோ பாப்கார்னைக் கொறித்துத் தள்ளுகிறார்கள்.
Credit: Netnebrasca

தீர்க்க தரிசி

1500 – களின் மத்தியில் தெற்கு இங்கிலாந்தைச் சேர்ந்த பழங்குடிகளுக்கு சுகுவான்டோ (Squanto) என்னும் பெண்மணி விவசாயத்தைக் கற்றுக் கொடுத்ததாக வரலாறு தெரிவிக்கிறது. சோளத்தினைப் பொரித்து உண்ணலாம் என்பதை அம்மக்களுக்கு உணர்த்தியதும் அவர் தான். தீர்க்கதரிசி !!!

அந்தப் பழங்குடியின மக்களிடையே ஒரு வித்தியாசமான திருவிழா இருந்திருக்கிறது. என்னெவென்றால், ஒரு சுபயோக சுபதினத்தில் எல்லோரும் ஒன்று கூடுவார்கள். மக்கள் ஒவ்வொருவரும் மற்றவர்கள் தமக்குச் செய்த உதவிக்கு நன்றி தெரிவிப்பார்கள். ஒவ்வொரு முறையும் நன்றி கூறுவோர் பாப்கார்னை அடுத்தவருக்கு வழங்குவர். எவ்வளவு நல்ல திருவிழா??

சூடுபிடித்த வியாபாரம்

எவ்வளவு காலம் தான் சோளத்தை மண்ணில் போட்டு சூடேற்றி, அதைப் பொரித்துத் திண்பது? எனத் தீவிரமாக யோசித்தார் சார்லஸ். 1800 – களின் இறுதியில் வேர்க்கடலையை வறுத்து வியாபாரம் செய்து கொண்டிருந்த இந்த சார்லஸ் தான் முதன்முதலில் சோளத்தினைப் பொரிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர். உலகை மாற்றிய கண்டுபிடிப்புகளில் ஒன்றல்லவா இது?

Credit: Buntut

நீராவியின் மூலம் இயங்கக் கூடிய இந்தப் புது இயந்திரம் சார்லசைப் பெரும் பணக்காரராக்கியது. பாப்கார்னை நம்பினோர் ஒரு போதும் கைவிடப்படார். 1890 – ஆம் ஆண்டு பிரத்யேக பாப்கார்ன் நிறுவனம் அவரால் தொடங்கப்பட்டது. அதன் பின்பு மைக்ரோவேவ் மூலம் பாப்கார்ன் உருவாக்கும் தொழில்நுட்பம் 1981 – ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் வரை நீராவி தான் பயன்படுத்தப்பட்டது.

Show comments